�
சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக துரித உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை, எழும்பூர் புதுப்பேட்டையில் ‘ஃப்ரண்ட்ஸ் ஃபுட்’என்ற பெயரில் ஜாகீர் உசேன் என்பவருக்குச் சொந்தமான துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. ஆயுதப்படைக் காவலர் ஒருவர் இங்கு உணவு வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது அந்தக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப் படுவதைக் கண்டு அது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அங்கு இருந்த கட்சிப் பிரமுகர் ஒருவரும் கடை உரிமையாளரும்‘கேள்வி கேட்க நீங்கள் யார்? ஆயுதப்படையில் தானே இருக்கிறீர்கள். கார்பரேஷன் உயர் அதிகாரி போன்று கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. அவர்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்’என்று மிக அலட்சியமாக பதிலளித்தனர். அது மட்டுமின்றி அந்த காவலருக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ அந்தக் காவலரால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்த நிலையில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து அந்த உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகளை அந்த உணவகம் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் உணவக உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
�,”