தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே கரும்பு வழங்கியதற்கான நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி, பழைய சர்க்கரை ஆலைக்கு வந்த புதிய ஆலை நிர்வாகத்தினரை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகேயுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இந்த ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கும், ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் பணம் வழங்காதது மற்றும் விவசாயிகள் மீது வங்கிகளில் கடன் பெற்றுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை ஆலை இயங்காமல் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும், பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே ஆலையை நடத்தி வந்த நிர்வாகம் சென்னையில் உள்ள வேறு ஒரு நிறுவனத்துக்கு ஆலையை விற்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஆலையை வாங்கிய அந்த தனியார் நிறுவனம், ஆலையின் தலைமை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனுசாமி என்பவரை நியமனம் செய்தது. இதைத் தொடர்ந்து அவருடைய தலைமையில் அந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று பூஜை செய்வதற்காக சர்க்கரை ஆலைக்கு வந்தனர்.
இதை அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டு வந்து ஆலையின் புதிய நிர்வாகத்தினரை முற்றுகையிட்டனர். சர்க்கரை ஆலையின் முன்னாள் நிர்வாகத்துக்கு கரும்பு வழங்கியதற்காக தங்களுக்கு முன்னாள் நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.100 கோடி மற்றும் தங்கள் பெயரில் வங்கிகளில் பெற்ற ரூ.350 கோடி ஆகியவற்றை வழங்கி விட்டு பூஜை போடுங்கள் எனக் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள், மண்டல துணை தாசில்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் சுகுணா ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடமும், ஆலையை வாங்கிய தனியார் நிறுவனத்தினரிடமும் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வருகிற 15ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் ஆலை வளாகத்தில் அனைத்து விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்பட்டவுடன் ஆலையைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனுசாமி, “ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் அனைவரையும் வருகிற புதன்கிழமை காலை வரச்சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கு கரும்புக்கு உண்டான நிலுவை தொகை அனைத்தும் ஆலையை வாங்கிய புதிய நிறுவனம் வழங்கும்” என்றார்.
மேலும், முழுமையாக தொகையை வழங்க இயலாவிட்டாலும் தவணை முறையில் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் வழங்கிய கரும்புக்கு உண்டான தொகையை தங்கள் நிறுவனம் வழங்கும் எனவும் விவசாயிகளின் முழு ஆதரவு எப்போதும் தங்களுக்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
**-ராஜ்**
.