நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாகை-விழுப்புரம் நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்வதற்காக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் கிராமத்துக்கு நேற்று வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்திரங்களுடன் வந்தனர்.
அப்போது வயல் பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபாலசமுத்திரம், சாமியம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை அமைப்பதற்கான உத்தரவு ஆணை இருந்தால் மட்டுமே சாலை அமைக்க வேண்டும். இல்லையெனில் பணியை கைவிட வேண்டும் என கூறி சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், அமுதா ராணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
**-ராஜ்**
.