கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

public

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாரந்தோறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்துவந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் மனுக்கள் பெறும் பெட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தப் பெட்டியில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்துள்ள மனுவில், ‘கவுந்தப்பாடி அருகே கஞ்சநாயக்கனூர், மேட்டூர், ஊராளி மேடு, காசிலிங்க கவுண்டன்புதூர், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து 48ஆவது மைலில் உள்ள இந்தப் பாசன பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தின்போது வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பயிர் சாகுபடி, பராமரிப்புப் பணிகள் தாமதமாகின. தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. வாய்க்காலுக்குத் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டால் மகசூல் பாதிப்பு ஏற்படும். எனவே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்ட காலத்தைக் கணக்கிட்டு கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் விவசாயிகள் கோரியுள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கோரிக்கை மனுக்களை வழங்க பொதுமக்கள் பலர் வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக பொதுமக்கள் வரிசையாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், பொதுமக்கள் கொண்டு வந்த பைகளை போலீஸார் சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் மண்ணெண்ணெய், பெட்ரோல் கேன்களை பொதுமக்கள் கொண்டு வருகிறார்களா என்று தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபடுகின்றனர்

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *