ஆறு வழிச்சாலை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Balaji

மத்திய அரசின் தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 133 கிலோமீட்டர் ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டுச்சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 133 கிலோமீட்டர் தூரத்துக்கு 3,200 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச்சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

இந்தச் சாலை தச்சூர் கூட்டுச்சாலை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனி குப்பம், தொளவெடு, பனப்பாக்கம், சென்னங்காரனை, பாலவாக்கம், பேரன்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

இந்தச் சாலையை அமைப்பதற்காக ஆந்திராவில் 2,186 ஏக்கர் நிலங்களும், தமிழ்நாட்டில் 889 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 44 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்தச் சாலையை அமைத்தால் வருடத்துக்கு மூன்று போகங்கள் விளைவிக்கக்கூடிய 500 ஏக்கர் விளைநிலங்கள், பல வீடுகள், கோயில்கள், அரசுப் பள்ளி கட்டடங்கள் பாதிப்படையும் என்று தெரிகிறது. குறிப்பாக தொழவேடு, சென்னங்காரனை, பணப்பாக்கம், பேரண்டூர், போந்தவாக்கம் போன்ற பகுதிகளில் மூன்று போகங்கள் விளையக்கூடிய சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலம் பாதிப்படையும் என்று மேற்கூறப்பட்ட கிராமப் பொதுமக்கள், விவசாயிகள் ஆறு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பல தொடர் போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் ஆறு வழிச்சாலை அமையவுள்ள வழித்தடத்தில் நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கிரையப் பத்திர நகல், மூலப் பத்திர நகல், கம்ப்யூட்டர் சிட்டா மற்றும் இதர ஆவணங்கள் உடைய நகல்களை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் கொண்டு வந்தால் நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று நஷ்டஈடு மதிப்பீடு குழு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் மேற்கூறப்பட்ட 12 கிராமப் பொதுமக்கள், விவசாயிகள் நேற்று (ஜூலை 31) காலை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நேரத்துக்கு வராமல் விவசாயிகளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

அதைக் கண்டித்தும், ஆறு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரில் பொதுமக்களும், விவசாயிகளும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ‘வேண்டாம்… வேண்டாம்… ஆறு வழிச்சாலை எங்கள் கிராமங்கள் வழியாக வேண்டாம்’ என்றும், ‘மாற்று வழியில் ஆறு வழிச்சாலை அமைக்க வேண்டும்’ என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முற்றுகையிட்ட தகவல் தெரிந்தவுடன் உயரதிகாரிகள் யாரும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வரவில்லை. இதனால் அங்கிருந்த இரண்டாம்தர அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள், ‘நாங்கள் ஆறு வழிச்சாலை அமைக்க நிலங்களைக் கொடுக்க மாட்டோம்’ என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share