திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ள பாலியப்பட்டு ஊராட்சியில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வருவாய்த்துறையினர் மூலம் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கு தேவையான நிலங்கள் பார்வையிடபட்டன. இதுபற்றி அறிந்த விவசாயிகள் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் கிராம மக்கள் சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் போராட்டம் தொடங்கி 75ஆவது நாளை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஊர்வலமாக வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.அப்போது கையில் கரும்புடன் ஏராளமான கிராம மக்கள் வந்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிப்காட் அமைப்பதன் மூலம் பாலியப்பட்டு, புதிய காலனி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல் காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர், செல்வபுரம், வாணியம்பாடி ஆகிய கிராமங்கள் மற்றும் பெரிய புனங்காடு, சின்ன பாலியப்பட்டு கிராமங்கள் உள்பட ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
சிப்காட் அமைத்தால் தற்போது தங்கள் விளைநிலங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், நெல், மணிலா கரும்பு மற்றும் சிறுதானியம் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், மேலும் தாங்கள் கால்நடைகளை வளர்த்து பொருளீட்ட முடியாது என்றும், கிராம மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, 50ஆவது நாள் போராட்டத்தில், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் மற்றும் மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.