சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் தனது 18 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக டெய்லி ஆக்டிவ் யூசர்ஸ் (DAUs – Daily Active Users) எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அதாவது, முந்தைய காலாண்டில் 1.930 பில்லியனாக இருந்த ஃபேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை, டிசம்பர் இறுதியிலான மூன்று மாதங்களில் 1.929 பில்லியனாக சரிந்ததாகக் கூறுகிறது, ஃபேஸ்புக்கை இயக்கி வரும் மெட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம்.
நியூயார்க்கில் நடைபெற்ற வர்த்தகத்துக்குப் பிந்தைய வர்த்தகத்தில் மெட்டாவின் பங்குகள் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சரிந்தது. இது நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பில் சுமார் 200 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சிக்கு சமம். அத்துடன் ட்விட்டர், ஸ்னாப் சாட் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களின் பங்குகளும் வர்த்தகத்தில் கடுமையாகச் சரிந்துள்ளன.
டிக்டாக் மற்றும் யூடியூப் போன்றவற்றின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் வருமானம் குறையும் என்று மெட்டா நிறுவனம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களும் குறைந்துள்ளனர். குறிப்பாக, இளைய பயனர்கள் செயலியை விட்டு வெளியேறியதே, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி பாதித்ததாகத் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார்.
டிக்டாக் உடன் போட்டியிட ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களில் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது. விளம்பரம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஆகியவற்றில் முதலீடு செய்து பல சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்றதுபோல், வீடியோ மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புவதாக மார்க் கூறியுள்ளார்.
“நமது குழு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தயாரிப்புகள் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. டிக்டாக் ஏற்கெனவே ஒரு பெரிய போட்டியாளராக உருவாகியுள்ளது, தொடர்ந்து வேகமாகவும் வளர்ந்து வருகிறது. மெட்டா முன்னேறுவதற்கு இது தடையாக இருந்தாலும், இந்த மைல் கல்லைத் தொடுவதற்கு ஒரு ஆரம்பமே” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.