எந்த ஒரு திரைப்படமும் அரசியல் படமே என்கிற கூற்று சினிமா உலகில் திகழ்கிறது.
ஒரு திரைப்படம் ஏதோ ஒரு வகையில் ஒரு அரசியலை சுமந்துகொண்டு தான் எழுதப்படுகிறது, உருவாக்கப்படுகிறது. ஒரு இயக்குனர் ஒரு படத்தின் கதையை எழுதும்போதோ அல்லது படத்தின் கதாபாத்திரங்களை உருவாக்கும்போதோ தாம் சந்தித்த, படித்த, அனுபவித்த, பார்த்த, கேட்ட, கற்பனை செய்த நிகழ்வுகள் மற்றும் மனிதர்களைத் தான் தன் படங்களுக்கு வடிவமைப்பார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் கவனத்தை ஈர்த்த படம் தான் ச.பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான தொண்ணூற்றாறு (96). தனிமைப்பயணம், தொண்ணூறுகளின் காதல் ஞாபகங்கள், பள்ளிக் காதல்கள், பழைய நண்பர்கள் ஒன்றுகூடல், கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் அழகான நடிப்பு, மனதை மயக்கியப் பாடல்கள் என அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தப் படம் தான் இந்த தொண்ணூற்றாறு. கிட்டத்தட்ட ஒரு காதல் காவியமாகப் பார்க்கப்பட்ட படம் தான் இது.
வழக்கமாக ஒரு இயக்குனர் தன் படங்களில் தன்னுடைய சித்தாந்தங்கள் மட்டும் சிந்தனைகளை வெளிப்படையாவோ அல்லது மறைமுகமாகவோ வைப்பார். அது எந்த வகையான படமானாலும் சரி. அதை பார்வையாளர்கள் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாமல் கடந்து போவதும் அவர்களின் நேர்த்தியைப் பொறுத்தது. ஆனால் இயக்குனரைப் பொறுத்தவரையில், தான் பார்வையாளர்களுக்கு கடத்த நினைத்தவற்றை வேறொரு பிம்பக்காட்சியின் மூலம் காட்டிவிடுவார். அந்த வரிசையில் ஒரு படம்; அதுவும் ஒரு இயக்குனரின் முதல் படம் காதல் படமாக வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது சாதாரணக் காரியமில்லை. அதற்கு நாம் இந்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
தமிழ் சினிமாவில் பல வகையான சினிமாக்கள் குறிப்பாக காதல் படங்கள் இதற்கு முன்பு வந்து கடந்துவிட்டாலும் அது அதனுள்ளே வேறொரு அரசியலை உள்ளடைத்திருக்கும். சற்று உள்நோக்கிப்பார்த்தால் அது நமக்கு காதல் படம் என்பதைத் தாண்டி வேறொரு படமாகத் தெரியும். இந்த தொண்ணூற்றாறு படமும் அந்த வரிசையில் கதாநாயகனான ராம் என்கிற ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரம் வாயிலாக நமக்கு அதையே உணர்த்துகிறது.
பொதுவாக ஒரு இயக்குனர் தன் படத்தின் கதாப் பாத்திரத்தைத் தன்னை உருவகப்படுத்தி, தான் மனதில் சிந்திக்கும் குணங்களுடன் தான் வடிவமைப்பார் மிகவும் குறிப்பாக கதாநாயகனின் கதாப் பாத்திரம். ஏனென்றால் ஒருசில கதாநாயகர்கள் வழியே ஒருசில அரசியல் சித்தாந்தங்கள் பார்வையாளர்களுக்கே தெரியாமல் அவர்களுள்ளே புகும் என்று இயக்குனர்களுக்குத் தெரியும்.
அந்த விதத்தில் இந்த படத்தின் கதாநாயகனின் கதாப் பாத்திரமானது பார்க்க ஒரு குழப்பமானக் கதாப்பாத்திரமாகத் தெரிந்தாலும் அது உள்ளளவில் ஒரு சித்தாந்தம் உடைய கதாப்பாத்திரமாகும். காதல் காட்சிகள் வழியே அதை இயக்குனர் மறைத்தாலும் அது ஆங்காங்கே எட்டிப்பார்த்து தானே ஆக வேண்டும்.
இப்போது விளக்கத்திற்கு வருவோம். “மாற்றங்களே கனா, மாற்றங்களே விடை” என்று துவங்குகிறது படம். அதற்கடுத்த கணமே ஒருவிதத் தனிமையான, கையில் புகைப்படக்கருவியுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறக் கதாநாயகனுக்கான ஒரு பாடல். கதாநாயகனின் பெயர் ராம் என்கிற ராமச்சந்திரன், கதாநாயகிக்கு ஜானகி தேவி (சீதாவின் மற்றொரு பெயர்).
தமிழ் சினிமாவில் இந்த ஜானகி என்ற பெயர் காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் கதாப்பாத்திரத்திற்கானது என்பது வரையறுக்கப்படாத விதிமுறை. சரி அது இருக்கட்டும்.
படத்தின் முதல் பாடல் முடிந்த உடன் முதல் வசனமாக “சிவாய சிவாய ஓம்,நமச்சிவாய சிவாய ஓம்” என கோவில் குளத்தில் ஒரு பக்தர் பாடுவதை, கதாநாயகன் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். இது சாதாரணக் காட்சியாக தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் கதாநாயகனான ராமின் வீட்டினுள்ளே காட்டப்படும் காட்சியை பார்க்கும்போது இந்தக் காட்சிக்கான தொடர்பு புரியும். ஏனென்றால் ஒரு பெரும் ரசிகர்கூட்டம் கொண்ட ஒரு கதாநாயகன் மூலம் சொல்லப்படும் கருத்து மக்களிடம் எளிதாக கடத்தப்படும் என்பது இயக்குனர்களுக்கு நன்கு தெரியும். கோவில் குளங்களை ரசிப்பது, தஞ்சாவூர் கோவில் பெருமை என கதாநாயகன் ஒருவித நவீன இந்துத் துறவியாகவே இருப்பார். மேலும் படத்தில் கதாநாயகனின் இருபத்திரண்டு வருட ஏகபத்தினி விரதமானது தன்னுடைய காதலுக்கானது என்று சாதரணப் பார்வையாளர்களால் எடுத்துக்கொண்டு “wow ராம்” போடவைத்தாலும், ஒரு காட்சியில் கதாநாயகனின் குடியிருப்பில் ஒரு சின்னக் கோவிலே உள்ளே வைத்திருப்பதன் மூலமும், வீட்டில் ஆங்காங்கே இருந்த நம்மாழ்வார் படங்கள் மூலமும் ராமின் கதாப்பாத்திரம் எந்த விதமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு காட்சியில் ராமின் நண்பர் “எந்த சோசியல் மீடியாவிலும் இல்லாத ராம்” என்று சொல்லும் காட்சியையும் மேலே சொன்னவற்றையும் பொறுத்திப்பார்த்தால் புரியும் கதாநாயகனின் கதாப்பாத்திரமானது எத்தகைய பழமையான மனநிலை கொண்டது என்று. இதற்கு மேலும் சான்றாக இன்னொரு காட்சியில் ஒரு இரவில் தன்னுடைய புகைப்படக்கலை மாணவிகளை எதேச்சையாக சந்திக்கும் ராம், அவர்களிடம் “இந்நேரத்துக்கு இங்க என்ன சுத்திக்கிட்டு இருக்கீங்க, உங்க வீட்ல யாரும் கேக்கமாட்டாங்களா? பொம்பள பசங்க தனியா வந்து இருக்கீங்க, உங்களுக்கெல்லாம் பத்து மணிக்கு வீட்டுல கேக் கட் பண்ணா ஆகாதா? பன்னிரண்டு மணிக்கு வெளிய வந்து தான் வெட்டனுமா?” என்று கேட்கும் காட்சியாக இருந்தாலும் சரி, கதாநாயகி ஒரு சென்டிமீட்டர் முன்னே வந்தால் கதாநாயகன் ராம் ஒரு அடி பின்னே செல்லும் காட்சிகளாகட்டும், புடவை வண்ணத்தை சொல்லும்போது கூட ராமர் கலர் என்று சொல்வதாகட்டும் கதாநாயகனின் கதாபாத்திரம் மூலம் படம் முழுக்க ஏதோ ஒன்றை சொல்ல முற்பட்டுக்கொண்டே இருந்தார் இயக்குனர்.
ராமின் முழுக்குடும்பத்தையும் காட்டிவிட்டு, ஜானுவின் குடும்பத்தை காட்டாமல் தப்பித்துக்கொள்ளும் இயக்குனர், சிறுவயது ஜானு என்கிற ஜானகிதேவியின் கதாபாத்திரத்தை விளக்கும் போது “ஜானுவின் குடும்பம் இசைக்குடும்பம்” எனும் காட்சியில் ஜானுவின் குடும்பம் எப்படிப்பட்டது என்பதை சொல்லத்தயங்கி சொல்லிவிட்டார். (தமிழ் சினிமாவில் இசைக்குடும்ப ஜானகிதேவிகளை குளியலறை பாடகர்களுக்கு மணம் முடித்துக் கொடுக்கும் காட்சி லட்சம் படத்தில் ஒன்று தான் நடக்கும்)
ஆனால் இந்த சித்தாந்தங்கள் எல்லாவற்றையும் இடையிடையில் சொருகி காதல் காட்சிகள் மூலம் நம் ஊர்ப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, வாழ்க்கையின் அழகு கடந்த கால ஞாபகங்களிலும் இருக்கிறது என்று மனதை உருக்கியக் காதல் படமாகக் காட்டிய விதத்தில் தொண்ணூற்றாறு பட இயக்குனர் வென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் படத்திலேயே இந்தியாவின் ஒரு மிகப்பெரும் மத சித்தாந்தத்தைப் பேசாமல் பேசிய இயக்குனர் ச.பிரேம்குமாரின் அடுத்தப்படம் கவனத்திற்குரியது தான்.
-பிரதாப் பாஸ்கரதாஸ்.�,”