ராசிபுரத்தில் சிறுமிகளுக்கு வன்கொடுமை: 6 பேர் போக்சோவில் கைது!

Published On:

| By Balaji

நாமக்கல் அருகே இரு சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. ஹத்ராஸ் சம்பவத்திலிருந்து மீள்வதற்குள்ளே அடுத்தடுத்து பல குற்றங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 12, 13 வயதுடைய இரு சிறுமிகள் தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமிகளின் தந்தை, காலமானதைத் தொடர்ந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இரு சிறுமிகளையும் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட சிலர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இவ்விவகாரத்தில் இன்று, முதியவர் முத்துசாமி(75), சிவா(26), சூர்யா(23), சண்முகம்(45), மணிகண்டன்(30), செந்தமிழ் செல்வம்(31) என 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராசிபுரம் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கிருபானந்தன் போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வடுவே இன்னும் மறையாத நிலையில், இரு சிறுமிகள் ராசிபுரத்தில் வன்கொடுமைக்கு ஆளானது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share