முதுநிலை படிப்பு: அரசு மருத்துவர்களுக்கு எந்த தடையும் இல்லை!

Published On:

| By Balaji

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவிகித ஊக்க மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவிகிதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,968 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவிகிதம் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள 969 இடங்களிலும் 50 சதவிகிதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 சதவிகித இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. அதனால், இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கின் மீதான வாதப்பிரதிவாதங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நடைபெற்றது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,”ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில், அணுக முடியாத பகுதி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி தண்டபாணி தீர்ப்பு வழங்கினார்.

அதில், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டு சலுகைகள் வழங்க எந்தத் தடையும் இல்லை எனக் கூறி, இந்தச் சலுகையில் ஏதாவது ஒன்றை மட்டுமே தர உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தார். பொதுப் பிரிவிலும் அரசு மருத்துவர்கள் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பிற்கு அரசு மருத்துவர்களிடையே மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share