திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க வரும் 28ஆம் தேதி பொதுக்குழு கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகத் தேர்வு செய்யப்படவுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ஆம் தேதி காலமானார். இதனையடுத்து திமுக செயற்குழு அவசரக் கூட்டம் கடந்த 14ஆம் தேதி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் பேசிய துரைமுருகன், விரைவில் தலைவராகப் போகும் செயல்தலைவரே என்று குறிப்பிட்டு பேசினார். மேலும், ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று பல்வேறு நிர்வாகிகளும் பேசினர். தலைவராக ஸ்டாலின் பதவியேற்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டத்தில், தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் தொடர்பாகவும், தணிக்கை குழு அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்றும் க.அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் பொதுக் குழு குறித்து நாம் ஏற்கனவே [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2018/08/14/117) வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அதில் ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 30ஆம் தேதி ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டு கலைஞரின் பெருமைகள் குறித்து உரையாற்றுகின்றனர். அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராகப் பங்கேற்க வேண்டும் எனவும், எனவே அதற்கு முன்னதாகவே பொதுக்குழுவைக் கூட்டி ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் எனவும், அவர் தலைவரான பிறகு நடைபெறும் முதல் கூட்டமே பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் விரும்பியுள்ளனராம். இதனால் ஆகஸ்ட் 28ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
�,”