கடந்த ஞாயிறு (ஜூலை 8) மாலை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்துவந்த அழைப்பின் பேரில் சில திமுக எம்.எல்.ஏ.க்கள் செனடாப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர்.
மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா அங்கே சென்ற பிறகுதான், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அங்கே வந்திருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் தாயகம் கவி வந்தார். அப்புறம் தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் எம்.எல்.ஏ. கோவி செழியன் வந்தார்.
இப்படியாக மாலை ஆறு மணி வாக்கில் இ.கருணாநிதி பல்லாவரம், மு.பெ.கிரி செங்கம், இன்பசேகரன் பென்னகரம், ஈஸ்வரப்பன் ஆற்காடு, எஸ்.ஆஸ்டின் கன்னியாகுமரி, ஜெ.ரவிச்சந்திரன் எழும்பூர், வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம், கோவி செழியன் திருவிடைமருதூர், அன்பில் மகேஷ் திருவெறும்பூர், எழிலரசன் காஞ்சிபுரம், டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி, தாயகம் கவி என 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் வீட்டில் இருந்தார்கள்.
சுவையான வடை, காபிக்குப் பிறகு அந்த 12 எம்.எல்.ஏ.க்களிடமும் உருக்கமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்.
“நான் உங்களை நம்பிதான் இருக்கேன். என்னடா செயல் தலைவர் இப்படி சொல்றாரேனு நீங்க நினைக்கலாம். நான் ரொம்ப யோசிச்சுதான் உங்களை செலக்ட் பண்ணி இங்கே கூப்பிட்டிருக்கேன். நீங்க 12 பேரும் மாவட்டச் செயலாளர் கிடையாது. அதிகபட்சமா 40, 45 வயசு இருக்குமா. இதுமாதிரியான ஓர் இளைஞர் படையை நான் ஆறு மாசமா தேடி டிக் பண்ணி இப்ப உருவாக்கியிருக்கேன்” என்றதும் வந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
தொடர்ந்து பேசினார் ஸ்டாலின்.
“திமுகவுல சீனியர்கள், பெருந்தலைகள் நிறைய பேர் இருக்காங்க. சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. அவங்க என் முன்னால ஒண்ணு பேசுறாங்க, வெளியில போய் ஒண்ணு பேசுறாங்க. கட்சியில சில வேகமான நடவடிக்கைகளுக்கு அவங்க இடைஞ்சலாதான் இருக்காங்க. ஆனா, அவங்கள என்னால பகிரங்கமா குத்தம்சொல்ல முடியாது.
மாவட்ட அளவுல இரட்டைப் பதவிகள் வெச்சிருக்கறவங்க லிஸ்ட் கேட்டேன். பல மாவட்டங்கள்ல இன்னும் வரலை. பூத் கமிட்டி அமைக்கச் சொல்லி மாசக்கணக்காச்சு. அதுலயும் பல மாவட்டங்கள்ல பணி முடிஞ்சும் முடியாமையும் இருக்கு. 12 பேர் இருக்கீங்க. உங்களை ஆறு டீமா பிரிச்சிருக்கேன். ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு மண்டலம்னு தமிழ்நாட்டை ஆறா பிரிச்சிருக்கோம்.
ஒரு பூத்ல ஆயிரம் ஓட்டு இருக்குன்னா, 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் போடணும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்களை போடக் கூடாது. அந்த பூத்ல இருக்குற எல்லா சாதிகளுக்கும் பூத் கமிட்டியில உரிய பிரதிநிதித்துவம் இருக்கணும். ஆயிரம் பேருக்கு 20 பேர் மெம்பர்னா அதுல பெண்கள் 5 பேர் கண்டிப்பா இருக்கணும். 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி மெம்பர்னா, அந்த மெம்பர் அந்த 60 பேர் வசிக்கிற பகுதியில வசிக்கிறவரா இருக்கணும். 2ஆவது வார்டுக்கு 8ஆவது வார்டுலேர்ந்து கொண்டுவந்து போடக் கூடாது.
புறநகரில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், கிளைச் செயலாளர்களை வைத்து கூட்டம் போடுங்க. மாநகரில் மாவட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர் கூட்டம் போடுங்க. ஏற்கனவே பல மாவட்டங்கள்ல பூத் கமிட்டி எடுத்து வெச்சிருப்பாங்க. நீங்க அந்தப் பட்டியலை வாங்கி அதுல இந்த நிபந்தனைகள் ஃபில் ஆகியிருக்கானு பாருங்க. இல்லேன்னா மாத்தச் சொல்லுங்க. ஜூலை 12ஆம் தேதி இந்த பணிகளை ஆரம்பிக்கணும். ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள்ள முடிச்சிடணும். நான் எல்லா மாவட்டச் செயலாளர்கள்கிட்டயும் சொல்லிடறேன். உங்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பையும் அவங்க கொடுப்பாங்க’’ என்று கூறினார் ஸ்டாலின்.
அதன்பின் பூத் கமிட்டி பற்றிய விதிமுறைகள் அடங்கிய கிட் ஒன்று 12 பேருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி 12 பேரிடமும் கருத்து கேட்ட ஸ்டாலின்,
“நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேணும்னாலும் வரலாம். அதனால 12ஆம் தேதி ஆரம்பிச்சு வேகமாக பண்ணுங்க. ஒவ்வொரு கூட்டத்தையும் போட்டோ எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க. பூத் கமிட்டி விவரங்களை எக்செல் பிரின்ட்ல அனுப்புங்க. மறுபடியும் சொல்றேன். திமுக இனி சீனியர்கள்கிட்ட இல்ல. உங்க கையிலதான் இருக்கு. நம்பிக்கையா பணியாற்றுங்க” என்று முடித்து அனைவருக்கும் கை குலுக்கி வழியனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினுக்கு செயல்திட்ட வகுப்பாளராக இருக்கும் சுனிலும் கலந்துகொண்டார்.
**- ஆரா**�,”