மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் போட்டியிடுகிறார்.
ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் எல்லை பாதுகாப்புப் படை வீரராகப் பணியாற்றினார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரிகள் உணவுப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர் என்றும் காணொலியில் கூறியிருந்தார்.
இந்தக் காணொலி நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எல்லை பாதுகாப்புப் படை மறுப்பு தெரிவித்தது. இதற்காக தேஜ் பகதூர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் தேஜ் பகதூர். இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிக கட்சிகள் என்னைச் சேர்த்து கொள்ள முன்வந்தன. ஆனால், தனித்துப் போட்டியிடவே நான் விரும்புகிறேன். தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை. ராணுவ வீரர்கள் விஷயத்தில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. ராணுவ வீரர்கள் பெயரில் வாக்குகளைப் பெற முயற்சி செய்து வருகிறார் மோடி. ஆனால், அவர்களுக்கு மோடி எதுவும் செய்யவில்லை. கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்காகத் தயாராகி வருகிறேன். ஊழல் பிரச்சினையை மையப்படுத்தியே இந்தத் தேர்தலைச் சந்திக்கப் போகிறேன். விரைவில் வாரணாசியில் சென்று முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் பிரச்சாரத்தைத் தொடங்குவேன்.அதிகபட்ச வாக்காளர்களைக் கவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என கூறினார்.
அதுபோன்று, பிரதமருக்கு எதிராகத் தமிழக விவசாயிகள் வாரணாசியில் போட்டியிடுகின்றனர். இதன்மூலம் பிரதமருக்கு எதிராகப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.�,