சென்ற அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு உயர்ந்துள்ளதால் அதிக வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 17.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2,698 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில் 4,411 கோடி டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இதன் அளவு 17.62 சதவிகிதம் உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தங்கம் இறக்குமதி சரிவைச் சந்தித்த போதும் 1,713 கோடி டாலருக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் ஏற்றுமதி 13.27 சதவிகிதமும், இறக்குமதி 16.37 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,018 கோடி டாலர் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி 52.64 சதவிகிதம் உயர்ந்து 1,421 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேபோல எண்ணெய் சாராத இதர பொருட்களின் இறக்குமதியும் 6 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டு 29.9 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.�,