�
நடப்பு நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதை அடைய முன்கூட்டிய வரித் தாக்கல்களில் அரசு அதிகக் கவனம் செலுத்தவுள்ளது.
இந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.11.5 லட்சம் கோடியை வசூலிக்க முன்பு அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை பிரச்சினையால் வரி வசூலை உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை ரூ.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த இலக்கை அடைவது மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்குக் கடினமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் முன்கூட்டிய வரித் தாக்கல் (advance tax) விவரங்கள் வந்த பிறகுதான் இதுகுறித்த முறையான கணக்கீடு கிடைக்கும்.
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் நேரடி வரியாக ரூ.7.89 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வருவாயை உயர்த்தும் முனைப்பில், வரி செலுத்துவோர் தங்களது நான்காவது மற்றும் கடைசித் தவணையை நடப்பு நிதியாண்டுக்குள் செலுத்தும்படி நேரடி வரிகள் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.10,000க்கு மேல் வருமானம் கொண்ட பணியாளர்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்தியாக வேண்டும். வரி வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் மூத்த வரித் துறை அதிகாரிகளுடன் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் பி.சி.மோடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.
சுங்க வரி வசூல் அளவையும் ரூ.1.12 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.30 லட்சம் கோடியாக மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
�,