வீரபாண்டி ராஜாவை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து மாற்றியதற்கு சேலம் திமுகவில் எதிர்ப்பு எழ ஆரம்பித்திருக்கிறது.
தேர்தல் பிரிவு செயலாளராக வீரபாண்டி ராஜாவை நியமித்து நேற்று திமுக தலைமைக் கழகம் அறிவித்த நிலையில், இன்று காலை சேலத்தில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் சிலையை நோக்கி ராஜாவின் ஆதரவாளர்கள் ஐம்பது முதல் நூறு பேர் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கே வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு,’தலைமையே தலைமையே பரிசீலனை செய், முடிவை பரிசீலனை செய்’ என்று முழக்கமிட்டனர்.
அப்போது ஒரு தொண்டர், வீரபாண்டி ராஜாவை மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயல, அவரை சக திமுகவினர் பிடித்து இழுத்து அவர் தலை மேல் வாட்டர் பாட்டில் மூலம் தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தனர். இதைத் தவிர வேறு எந்த சலசலப்பும் எழவில்லை.
இதற்கிடையில் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகனும், ஐ.டி.விங் நகர செயலாளர் சேலம் நந்தாவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சந்திரமோகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ நான் யாரையும் கேட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. நானாகவே முன் வந்து முதல் ஆளாக ராஜினாமா செய்கிறேன். என் பின்னால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். வீரபாண்டியார் குடும்பத்தை ஒதுக்கி வைத்து சேலம் திமுகவில் மாற்றம் காண முடியாது. நான் ராஜினாமா செய்தது ராஜாவுக்கே தெரியாது. அவர் பின்னால் இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிவலிங்கம், தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட வீரபாண்டி ராஜா ஆகிய மூவரும் இன்று அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போதும் ராஜாவிடம் பெரிதாக முகம் கொடுத்துப் பேசவில்லை ஸ்டாலின். அதன் பின் செல்வகணபதி முதன்மைச் செயலாளர் நேருவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். சேலம் கிழக்கு மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் பற்றி சிவலிங்கத்திடம் நேரு கேட்டறிந்திருக்கிறார்.
�,”