fமீண்டும் பொறுப்பேற்கும் அருண் ஜேட்லி

Published On:

| By Balaji

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தற்காலிக ஓய்வில் இருந்த அருண் ஜேட்லி, இன்று மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கடந்த மே மாதம் 14ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தற்காலிக ஓய்வில் சென்றார். இதையடுத்து அன்றே ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தற்காலிக நிதியமைச்சராகப் பொறுப்பேற்று பணிகளைக் கவனித்து வந்தார். டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அருண் ஜேட்லி இப்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் நிதித் துறை அமைச்சராக அருண் ஜேட்லியை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல இவர் முன்பு பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சராகவும் விளங்கினார். தற்போது அந்தப் பொறுப்பையும் இவரே மீண்டும் ஏற்கவுள்ளார்.

அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து வந்த பிறகு வீட்டிலிருந்தே தனது வழக்கமான பணிகளை மேற்கொண்ட நிலையில் பியூஷ் கோயலும் நிதியமைச்சர் பொறுப்பில் நீடித்துவந்தார். இதுவரையில் பிரதமர் அலுவலகத்தின் வலைதளத்தில் பியூஷ் கோயலின் பெயர் நிதியமைச்சர் என்றும், நிதியமைச்சகத்தின் வலைதளத்தில் அருண் ஜேட்லியின் பெயர் நிதியமைச்சர் என்றும் இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை மேலும் வெடிக்கச் செய்தனர். தற்போது அருண் ஜேட்லி மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் சில நாட்களாக எழுப்பிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share