மாநில சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் மாநாடு நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் அறிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மதிமுக சார்பில் தஞ்சையில் அண்ணா பிறந்த நாள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தஞ்சை மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அரசியல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் வைகோ, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில:
நீட் நுழைவுத் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பைத் தவிடுபொடியாக்கும் என்பதால், அதிலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும்.
காவிரி நடுவர் மன்றத்தைச் செயல்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை இலங்கை திரும்பப்பெற மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.
காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மாநாட்டில் இறுதியாகப் பேசிய வைகோ, “ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறித் தமிழகத்தில் எரிவாயுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. நீட் தேர்வைக் கட்டாயமாகத் திணித்து மாணவர்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது. மொத்தமாகத் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பிரதமர் மோடி நடத்துகிறார். எனவே மாநில சுயாட்சியை முன்வைத்து சென்னையில் வரும் நவம்பர் 20ஆம் தேதி மாநாடு நடத்தப்படும்” என்று பேசினார்.�,