fமகளிர் விடுதி: தமிழக அரசுக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

~

தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து மகளிர் விடுதிகளையும் ஒழுங்குபடுத்தும் வகையில் 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, மகளிர் விடுதியில் உள்ள அறைகள் 120 சதுர அடி பரப்பு கொண்டிருக்க வேண்டும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளை வார்டன்களாக நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன் காரணமாக விடுதிக்கான வாடகை அதிகரிக்கக் கூடும் எனக் கூறி, இந்த சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், தீப்தி உள்ளிட்ட ஏழு பெண்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று (மார்ச் 9) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் நலனில் அரசுக்கு அக்கறை இருந்தால் மகளிர் விடுதிகளுக்கு வாடகை உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த சட்டம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை வரும் 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share