fபுகையிலை படங்கள் : அன்புமணி கண்டிப்பு!

public

புகையிலைப் பொருட்கள் மீது 85 சதவிகித அளவுக்கு எச்சரிக்கை.ப் படங்கள் இடம்பெறுவது தொடர்பான வழக்கைக் கடந்த வெள்ளியன்று விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “85 % எச்சரிக்கைப் படங்கள் வெளியிடுவதற்குத் தடை விதித்தது. அதேவேளையில் 40% படங்கள் இடம்பெறலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்குப் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாசும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக இன்று(டிசம்பர் 17) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிகரெட், பீடி, போதைப் பாக்குகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்ற ஆணை செல்லாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது ஆகும்” என்று குறிப்பிட்டுள்ள அவர், 85% அளவு எச்சரிக்கைப் படங்கள் செல்லாது என்பதற்காகக் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள காரணங்கள் எதையும் ஏற்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு மாறாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று நீதிபதிகள் தனித்தனியாக அளித்த தீர்ப்புகளில் கூறியுள்ளனர். நீதிமன்றத்துக்கு இதுகுறித்த புரிதல் இல்லை அல்லது மத்திய அரசுத் தரப்பில் சரியாக புரிய வைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. புகையிலை எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடுவதன் மூலம் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 40% அளவில் எச்சரிக்கைப் படம் வெளியிடப்பட்டது. எச்சரிக்கைப் படங்களின் அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அப்போதே முடிவெடுக்கப்பட்டது” என விளக்கமளித்துள்ளார்.

“உலகின் பல நாடுகளில் இதைவிடக் கடுமையான எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் வழக்கம் உள்ளது. பிரேசில் நாட்டில் 100% அளவுக்கு எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்படுவது மட்டுமின்றி, சிகரெட்டுகளில் 4700 வகை நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் பார்த்தாலே புகையிலைப் பழக்கத்தை கைவிடும் வகையில் அருவருக்கத்தக்கப் படங்கள் வெளியிடப்படுகின்றன” என மேற்கோள் காட்டியுள்ள அன்புமணி, புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவதால் நல்ல பயன் கிடைத்திருப்பதாக உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை ஆய்வில் (Global Adult Tobacco Survey)) தெரியவந்துள்ளதாகவும் 85% அளவு எச்சரிக்கைப் படங்களால் சிகரெட் புகைப்பவர்களில் 62 விழுக்காட்டினரும், பீடி புகைப்பவர்களில் 54 விழுக்காட்டினரும், புகையில்லாத புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களில் 46 விழுக்காட்டினரும் தங்களின் பழக்கத்தைக் கைவிடுவது குறித்துச் சிந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு எதிராக இந்நடவடிக்கை இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அது ஓரளவு உண்மையே. எச்சரிக்கைப் படங்கள் குறித்துப் பரிந்துரைப்பதற்காக சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் புகையிலை நிறுவன அதிபர்களும், அவர்களின் ஆதரவாளர்களும்தான். அவர்கள் அளித்த அறிக்கை அபத்தத்தின் உச்சம் ஆகும்.

சர்க்கரை நோயை உருவாக்குவதற்காக வெள்ளை சர்க்கரை தடை செய்யப்படாத நிலையில், புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்காக புகையிலைப் பொருட்களுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்? என்று உறுப்பினர் ஷியாம் சரண் குப்தாவும், தினமும் ஒரு பாட்டில் மதுவும், 60 சிகரெட்டும் பிடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; உண்மையில் புகையிலையில் ஒருவித மூலிகைத் தன்மை உள்ளது என்று இன்னொரு உறுப்பினர் ராம் பிரசாத் சர்மாவும் கூறியிருந்த நிலையில், அந்த குழுவின் பரிந்துரையை ஏற்றிருந்தால் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது மதுவும், புகையிலையும் உடல் நலனுக்கு ஏற்றது என்றுதான் குறிப்பிட வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

“புகையிலையின் தீமைகள் குறித்தும், எச்சரிக்கைப் படங்களின் அவசியம் குறித்தும் உயர் நீதிமன்றத்திற்கு விளக்க மத்திய அரசு தவறி விட்டது” என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அவற்றை உச்ச நீதிமன்றமே விசாரித்திருக்க வேண்டும் என்றும் அந்த வழக்குகளைக் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசு வழக்கறிஞர்கள் அனுமதித்திருக்கக் கூடாது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் வேதனைத் தெரிவித்துள்ளார்.

“புகையிலைப் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதைத் தடுக்க சிறந்த கருவி எச்சரிக்கைப் படங்கள்தான். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *