வனமெல்லாம் செண்பகப்பூ 11 – ஆத்மார்த்தி
கூட்டப் பாடல்கள் தரும் திருப்தியே அலாதிதான். எப்போதெல்லாம் சோர்ந்து, அடுத்து எந்தத் திசையில் நகர்வதெனத் தெரியாமல் உறைய நேர்கிறதோ… அப்போது மட்டும் கேட்பதற்கான ஒலிப்பேழை ஒன்று என்னிடம் இருந்தது. எல்லா நாட்களுக்குமான பாடல்கள் அதில் இருக்காது. அதிலிருக்கக்கூடிய பாடல்கள் பதினெட்டுமே குழுப்பாடல்கள். அதுவும் ஆண் குரல் பாடல்கள். ‘ஏ அய்யா சாமி நீ ஆளைக் காமி’, ‘தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது தம்பி உன்னை நம்பி’, ‘ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவாவா’ போன்ற மென்மெலடி ரகக் குழுப் பாடல்கள் அறவே இருக்காது. மிகவும் நுட்பமான அரியவகைக் குழுப்பாடல்களின் கேஸட் அது.
சத்யா படத்தில் வரும் ‘போட்டா படியுது படியுது துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது பாரத நாட்டுக்கொரு கோட்டைச் சுவர் நாமாக…’ என்று கமலும் கோஷ்டியினரும் பாடும் முதற்பாடல் தொடங்கி லேசான விரக்தியினூடாகப் பிறக்கும் வறண்ட உற்சாகத்தை வழியவிடும் பாடல்களாகவே பார்த்துப் பார்த்துக் கோத்த பதினெட்டு மலர்களின் மாலை அது. அடுத்த பாடல் ‘வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா தென்றலே என்னோடு கானம் பாட வா’ என்கிற நியாயத் தராசு படப் பாடல். பாலைவனச்சோலை படத்தில் இடம்பெற்ற ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’ என்ற பாடல், வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வருகிற ‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்’ என்றபாடல் என அந்த வரிசையின் அத்தனை பாடல்களுமே பல விதங்களில் ருசி மிகுந்து ஒலிப்பவை.
மலையொன்றின் உச்சியிலிருந்து இன்னொரு மலையுச்சி நோக்கி அந்தரத்தில் பறந்து மிதந்து கலைந்து அடுத்த உச்சியில் மிக பாதுகாப்பாக எழுந்து நிற்கிற உணர்வைக் கனவில் அடைந்தாலும்கூட அது பலகாலப் பரவசமாகவே உள்ளே ததும்பும். நிசத்தில் நடக்காத வரைதான் அதன் பெயர் அதிசயம்.
அப்படியான பாடல்களின் வரிசையில் உச்சக்கட்டம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எல்லா விதங்களிலும் முக்கியமான, ஆனால், அதிகம் கவனம் பெறாத பாடல்களில் ஒன்று. இதை இசையமைத்தவர்கள் இரட்டையர் சங்கர் கணேஷ். இதே பாடல் 1982ஆம் ஆண்டு கன்னடத்தில் [மீவுரு]( https://www.youtube.com/watch?v=yV6eS2eHdRE ) கண்டது. அங்கேயும் அவர்களே இசை அமைத்தனர். கன்னடத்தில் பாடலை எழுதியவர் உதயசங்கர். கன்னடப் படமான ப்ரேமா மத்ஸராவை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். தமிழில் உச்சக்கட்டம் குறிப்பிடத் தகுந்த த்ரில்லர்களில் ஒன்று. இதை இயக்கியவர் ராஜ்பரத். மனம் பிறழ்ந்தவர்கள் மருத்துவமனையில் கூடி ஆடிப் பாடுகிற சூழலுக்கு [இந்தப் பாடலை](https://www.youtube.com/watch?v=MH1Z15V9tOY) இயற்றியவர் வாலி.
சித்தர்கூடப் பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்
பித்தர்கூடச் சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்
புத்தி கெட்ட மானிடருக்கு தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடருக்கு தத்துவங்கள் தேவையென்னடா
ஓடம் ஒரு வண்டியில் வரும் நிலத்திலே இருந்தா
வண்டி ஒரு ஓடத்தில் வரும் நீரிலே இருந்தா
சித்தர்கூடப் பித்தராகி புத்தி மாறி செல்லலாம்
பித்தர்கூடச் சித்தாராகி தத்துவங்கள் சொல்லலாம்
புத்தி கெட்ட மானிடருக்கு தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடருக்கு தத்துவங்கள் தேவையென்னடா
முட்டை வழியா கோழி பொறக்கும்
கோழி வழியா முட்டை பொறக்கும்
தாய்பிறந்து சேயா சேய்பிறந்து தாயா
கண்டதாரு நீயா சொல்..
(முட்டை )
வெகு அபூர்வமான சூழலுக்கான பாடல் வரிகளை அநாயாசத்தின் உச்சத்திலிருந்தபடி படைத்தார் என்றால் பொருந்தும். போலித் தத்துவங்கள் அல்லது தொடர்பற்ற உளறல்கள் இவற்றின் கொத்தான இந்தப் பாடல், இன்னும் சொல்வதானால் பாதியில் கலைந்த தத்துவங்களாக இவற்றைக் கொள்ள முடியும். கன்னடப் பாடலைவிடத் தமிழ்ப் பாடல் அர்த்தத்தில் மாத்திரமல்ல, இரண்டையும் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இரு மொழி உற்சாகங்களுக்கு இடையிலான குரல் தொனி பாடலை ஆண்ட விதம் போன்ற நுட்ப வித்தியாசங்களின் மூலமாகவும் உயர்ந்தோங்கிற்று. இதனொரு வரியைக் கூட வாழ்வுகளுக்குள் எடுத்துச் செல்ல முடியாது என்பதை மீறி மொத்தப் பாடலுமே உலர்ந்த உற்சாகமாக நம்முள் ஒட்டிக்கொள்வது இசையும் குரலும் செய்து காட்டுகிற மாயாஜாலமன்றி வேறில்லை.
மேகம் நிழலாக மாறும்
நீரும் வான் மேகம் ஆகும்
உலகே மாயம்
(சித்தர்கூடப் பித்தராகி)
நிறுத்து..
இந்த இடத்திலிருந்து பாடலின் மொத்த வேகமும் குறைக்கப்பட்டு இறங்குசாலையில் எஞ்சின் அணைக்கப்பட்ட வாகனம் முந்தைய முடுக்கம் மற்றும் இறக்கச்சரிதலின் விளைவினால் தொடர்ந்து ஓடுமே அதன் தன்மையுடன் ஒலிக்கத் தொடங்கும். மது மயக்கத்தின் பின்னதான உளறலைச் சித்திரிப்பதற்கான உன்னதக் குரல் பாலுவினுடையதுதான்.
நான் ஏந்தும் தேன் கிண்ணம் வாழ்க.. வாழ்க..
நான் ஏந்தும் தேன்கிண்ணம் வாழ்க
என்னை நீங்காமல் உறவாடும் சந்தோஷமே.. ஹ்ஹ சந்தோஷமே
சந்தோஷம் கொண்டாடும் சொர்க்கம்
அது சாராயம் உருவாக்கும் சாம்ராஜ்யமே.. சாம்ராஜ்யமே
குடியாத வீடு விடியாதடா
அடியாத மாடு படியாதடா.. படியாதடா
ஹ்ஹ.. நான் ஏந்தும் தேன் கிண்ணம் வாழ்க
இதுவரை மயக்கத்தின் உபசாலைகளில் மதியற்ற மந்தி போலலையும் மனமும் பாடலும் இங்கே மீண்டும் வானேகும் விமானமாகவே மறுபடியும் கிளைக்கத் தொடங்கும் பாடல்.
பத்து மாசம் தான் அன்னை சுமப்பாள்
மத்த நாளெல்லாம் யாரு சுமப்பா
பால் குடிக்கும் பிள்ளை கால் முளைச்சபின்னே
தோள் கொடுக்க யாரு சொல்
(பத்து மாசம் தான் )
வாழு நீயாக வாழு..
வளரு தானாக வளரு ஹ்ஹ..
வாழு வளரு
சித்தர்கூடப் பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்
பித்தர்கூடச் சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்
புத்தி கெட்ட மானிடருக்கு தத்துவங்கள் தேவையென்னடா
புத்தி கெட்ட மானிடருக்கு தத்துவங்கள் தேவையென்னடா
இந்தப் பாடல் ஏற்படுத்தித் தருகிற உற்சாகம் கொட்டும் மழையில் கற்பனைக்கு அப்பாலான இளவெம்மையை உதட்டுவழி நாவில் படர்த்தும் பனிக்கூழ்ச்சுவை போன்ற புதிர்தளும்பும் அனுபவமாகவே நிரந்தரிக்கிறது. இதன் இசைக்கு உரித்தான இரட்டையர்கள் சங்கர் கணேஷ் யூகிக்க முடியாத பெரிய காலமொன்றில் எத்தனையோ ஆர்ப்பரித்தல்களுக்கு மத்தியில் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட இசை மேதைகள். ஆயிரம் படங்களுக்கு மேலாக இசையமைத்து பல வகைப் பாடல்களை தமிழ் சமூகத்தின் மனங்களுக்குள் ஒலிக்கத் தந்தவர்கள். இங்கே காண்கிற பாடல் போன்று தங்களை நிரூபிக்கும் அரிய மரகதங்கள் பலவற்றையும் அளித்தவர்கள்.
வாழ்க இசை.
[மன்னன் மயங்கும் மலர்!](https://minnambalam.com/k/2019/07/12/23)
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
�,”