Fசொடக்கு பாடல் மீது வழக்கு!

Published On:

| By Balaji

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சி.பி.ஐ அதிகாரியாக ஆக வேண்டுமென முற்படும் சூர்யாவுக்கு எதிராக உயர் அதிகாரிகள் அதிகாரத்தை பயன்படுத்தி வேலை கிடைக்க விடாமல் செய்கின்றனர். வேலையில்லா திண்டாட்டத்தால் நண்பன் இறந்து போக, ரம்யா கிருஷ்ணன், சத்யன், செந்தில், மாஸ்டர் சிவசங்கர் ஆகியோருடன் இணைந்து அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.

இந்த பின்னணியில் அனிருத்தின் இசையில் மணி அமுதவனோடு சேர்ந்து விக்னேஷ் சிவன் சொடக்கு பாடலை எழுதியுள்ளார். அந்தோணி தாசன் பாடியுள்ளார். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்று தொடங்கும் இந்தப் பாடலின் சரணத்தில், ‘விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது… அதிகாரத் திமிர… பணக்கார பவர…’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளை எதிர்த்து அதிமுக நிர்வாகி சதீஷ் குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 5ஆம் தேதி [புகார்](https://minnambalam.com/k/2018/01/05/70) மனு அளித்திருந்தார்.

ஆனால், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “அந்த பாடல் அரசியல்வாதிகளை அவதூறாகச் சித்தரிக்கின்றன. அரசியல்வாதிகளைப் பார்த்து ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என்று வரிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் வன்முறை தூண்டப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த வரியை அகற்றவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹூலு வாடி ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் விசாரணையைத் திங்கட்கிழமைக்கு (ஜனவரி 22) ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel