யூபிஐ தளம் வாயிலான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 31 கோடியைத் தாண்டிவிட்டதாக தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர பரிவர்த்தனைகளின் அடிப்படையில், முதன்முறையாக யூபிஐ தளம் வாயிலான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 31 கோடியை எட்டியுள்ளதாக தேசிய கொடுப்பனவுக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், யூபிஐ தளம் வாயிலாக மொத்தம் ரூ.54,212.26 கோடி மதிப்பிலான 31.2 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஜூலை மாதத்தின் எண்ணிக்கையைக் காட்டிலும் 14 விழுக்காடு கூடுதலாகும். ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ.51,843.14 கோடி மதிப்பிலான 27.3 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தகவலில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தேசிய கொடுப்பனவுக் கழகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளில், ரூ.6,872.57 கோடி மதிப்பிலான 1.65 கோடி பரிவர்த்தனைகள் பீம் செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 21 வங்கிகளுடன் யூபிஐ தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சுமார் 114 வங்கிகள் யூபிஐ தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.�,