fசுயநலத்திற்காகப் பொய்யான பிரச்சாரம்!

Published On:

| By Balaji

தேர்தலுக்காகவும் சுயநலத்திற்காகவும் தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வு குறித்து வதந்தி பரப்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீட் தேர்வை ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் மரணம் ஒரு மிகப்பெரிய துயரத்தைக் கொடுக்கின்றது. மாணவச் செல்வங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்றதொரு சம்பவம் இனி நிகழாத வகையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். ஒரு துறையில் படித்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்று கருத வேண்டாம். எந்தத் துறையில் படித்தாலும் மாணவர்கள் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார்.

“தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் சுயநலத்திற்காக, நீட் தேர்வை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு பொய்யான வதந்திகளையும் பிரச்சாரங்களையும் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்” என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், “நீட் தேர்வு பயிற்சியை தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளை தரம் நிறைந்ததாக உயர்த்த வேண்டும் என்றும், நம் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தேர்வுகளை எழுதும் வண்ணம் தகுதி படைத்தவர்களாக மாற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்காகவும், சுயநலத்திற்காகவும் மட்டுமே இதனைப் பயன்படுத்துகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment