கேபிள் சங்கர்
இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக் கதைத் திருட்டு விஷயம்தான். பாருங்கள், நான்கூட இக்கட்டுரையை ஆரம்பிக்கக் கதைத் திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்!
என்னடா இது ஆரம்பித்த பத்தியிலேயே முருகதாஸுக்கு சப்போர்ட் செய்வதுபோல இருக்கிறதே என்று யோசித்தீர்களானால் நிச்சயம் இல்லை. இக்கட்டுரை யாருக்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையல்ல.
உலகம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து கதை இருக்கிறது. மனிதன் வாய் வழியாய் சொல்லப்பட்டது. மொழி, கலை வடிவத்திற்கு ஏற்ப அதனதன் வடிவில் மறு வடிவம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. அந்த மாறுதலே சாஸ்வதம் என்பதைப் புரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. அப்படியென்றால் தெரிந்தே கதையைத் திருடியவர்களைக் கேட்பது நியாயமில்லையா என்றால் நிச்சயம் கேட்கப்பட வேண்டிய, உரிமையைக் கோர வேண்டிய நியாயம்தான்.
**பகிரங்க வாக்குமூலம்**
சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய நிறுவனத்தின் சுயசரிதையை ஒரு தினசரியில் எழுதினார். எப்போது படங்கள் தயாரித்தார்கள், எங்கிருந்து படங்களின் கதை எடுக்கப்பட்டது போன்ற பல தகவல்கள் அதில் இருந்தன. ஏன் பிரபல கதாசிரியர் எழுதிய கட்டுரைத் தொடரிலும் அதே விதமான வாக்குமூலம்தான். ஆனால், படித்தவர்களுக்கு அது வாக்குமூலமாய்த் தெரியவில்லை. காரணம், அதை வைத்து இப்போது ஏதும் செய்ய முடியாது. கோர முடியாது. இவர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களின் கதாசிரியர்களுக்கோ, தயாரிப்பு நிறுவனங்களுக்கோ தமிழ் தெரிந்திருந்தால் இன்றைக்கும் வழக்கு போட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியான பகிரங்க வாக்குமூலங்கள்.
கதை காப்பி என்றால் எப்படி? ஓர் ஊருல ஒரு ராஜா, ஒரு ராணி. அவர்களுக்கு ஒரே ஒரு பெண். அவள் ஏழை விவசாயியைக் காதலிக்கிறாள்.
இன்னொரு கதை… ஒரு ராஜா, ராணி, அவருக்கு இரண்டு பெண்கள். அதில் ஒருத்தி ஏழை விவசாயியைக் காதலிக்கிறாள்.
இரண்டும் வேறு வேறு கதைகளா, இல்லை ஒரே கதையா? அடிப்படையாய்ச் சொல்லப்படுகிற லைன் ஒன்றுதான். ஆனால், அதைத் திரைக்கதையாக்கிய விதம்தான் வேறு வேறாய் இருக்கும்.
காதல் கதைகள் என்று சொல்லப் போனால்,
1. காதலர்களுக்கு வெளியிலிருந்து பிரச்சினை
2. காதலர்களுக்கு வீட்டிலிருந்தே பிரச்சினை.
3. காதலர்களுக்குள்ளேயே பிரச்சினை.
இந்த மூன்று லைனுக்குள்தான், சாதி, மதம், சமூக ஏற்றத்தாழ்வு, மனப் பிரச்சினைகள் எனப் பல உப கதைகள். காதல் படம் ரிலீஸானபோது வேறொரு இயக்குநர் சொன்ன கதையை பாலாஜி சக்திவேல் எடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே சாய்ராட் என்று எடுத்த கதையைப் பார்க்கும்போது அது பாலாஜி சக்திவேலின் காதல் படம் போலவே நமக்கு இருந்தது. மற்றவர்களுக்கு இல்லை. உயர் சாதிப் பெண்ணுக்கும், கீழ் சாதிப் பையனுக்குமிடையே காதல், வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்கிறார்கள். காதலில் பெண் பிரிக்கப்பட்டு, பையன் பைத்தியமாய் அலைகிறான். இங்கே இருவரும் கொல்லப்படுகிறார்கள். இதைத் தவிர வேறு வித்தியாசம் பெரிதாய் இல்லை. வீட்டை விட்டு ஓடி வந்து கஷ்டப்படும் காட்சிகள் அவரவர் இடங்களுக்கு ஏற்ப மாறியிருந்ததே தவிர, அடிப்படையில் ஒன்றுதான். ஆனால், யாரும் என் கதை என்று கோரவில்லை.
மெளன ராகத்தை மணிரத்னம் மகேந்திரனிடம் போட்டுக் காட்டியபோது, இது உங்கள் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆனது என்றாராம். மகேந்திரன் அதை மறுத்தாலும் நம்மால் அக்கதையில் உள்ள ஒற்றுமைகளைக் காண முடியும். ஆனால், அதே மெளன ராகத்தை, ‘ராஜா ராணி’யாக்கிப் பார்க்கும்போது குறைந்தபட்சம் பதினெட்டு விஷயங்கள் ஒற்றுமை இருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள அந்த இயக்குநர் தயாராக இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமே.
**பறந்துபோன ஒன் லைன்**
சமீபத்தில் ஒரு கதை விவாதத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். அங்கே இருக்கும் அத்தனை பெரிய ஹீரோக்களுக்கும் ஒரு மாஸ் கதை தேவைப்படுகிறது. அம்மாதிரியான லைன்களை எங்கே பார்த்தாலும் கேட்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் நான் ஒரு பிரபல கதாநாயகனுக்கு ஒரு ஒன் லைன் சொன்னேன். “ஊருலேந்து சென்னைக்கு வர்றான் ஒருத்தன். எதுக்குடா வந்தேன்னு கேட்டா? பெரிய டான் ஆகணும்னு வந்தேனு சொல்றானு” சொன்னேன். அட என்று அடுத்த ஒரு வாரத்தில் கதை கேட்டார்.
அடுத்த ஒரு மாதத்தில் ஒரு படம் ஆரம்பம் ஆனது. இங்கல்ல. தெலுங்கில். பிரபல நடிகர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட். அவரோட முதல் சீன் இந்த வசனம்தான்.
நான் சொன்னது சென்னையில். படமெடுத்தது ஆந்திராவில். எனவே அது என் கதை என்று வழக்கு போட முகாந்திரமே இல்லை. ஆனால், அது என்னுடைய ஒன்லைன். அது யார் மூலமாகவாவது அங்கே சென்றிருக்கலாம். திரைத்துறையைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என்று மொழி பேதமெல்லாம் கிடையாது. ஹிட் கதை, அதுவும் பெரிய ஹீரோவுக்கான கதை பிடிப்பது மிகவும் கஷ்டம். நான் இன்னும் மெருகேற்றி அதே கதையை வேறு ஒரு கோணத்தில் அதே ஒன்லைனை இன்னும் கொஞ்சம் மாற்றி வைத்துள்ளேன். அது என்னவென்றால்…
ஆங்… அதைச் சொல்ல மாட்டேன்!
**பெரிய படங்களுக்கே பிரச்சினை**
பாருங்கள் எவ்வளவு யோசித்துப் பார்த்துப் பேச வேண்டியிருக்கிறது! ஆனால், இம்மாதிரியான கதைப் பிரச்சினைகள் எல்லாம் சிறு முதலீட்டுப் படங்களுக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படியே வந்தாலும், தெரிந்தவர்கள் மத்தியில் பேசப்பட்டு, வெறும் க்ரெடிட் மட்டுமே கொடுக்கப்பட்டு பஞ்சாயத்து முடிந்த கதைகள் நிறைய இருந்தாலும், பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கே இந்தப் பிரச்சினை பெரிதாய் தலை தூக்குகிறது. சண்டியர் என்று கமல் தன் படத்துக்குப் பெயர் வைத்தபோது கொதித்தெழுந்த கிருஷ்ணசாமி, சில வருடங்களுக்குப் பின் அதே பெயரில் வந்த ஒரு சிறு முதலீட்டுப் படத்திற்கு எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை.
ஷங்கரின் எந்திரன் படம் என் கதை என்று பஞ்சாயத்து இன்று வரை கோர்ட், கேஸ் என்று அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், யோசித்துப் பாருங்கள். இம்மாதிரியான ரோபோ கதைகள் எத்தனை ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. ஜேம்ஸ்பாண்டும், மிஷன் இம்பாஸிபிள் ஹீரோவும் ஹீரோயினைக் கசமுசா செய்வதைத் தவிர, செய்வதெல்லாம் ஒன்றே. இன்றளவில் யாரும் என் கதையை காப்பியடிச்சிட்டான் என்று சண்டை போட்டதில்லை. காரணம் அவர்கள் தங்களது கேரக்டர்களிடையே உள்ள விஷயங்கள்வரை அனைத்தையும் முறைப்படுத்தியிருக்கிறார்கள். பதிவு செய்திருக்கிறார்கள். காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், இங்கே காப்புரிமை என்பது எல்லாம் வெறும் வெத்து வேட்டு. இங்கே வசனகர்த்தாவாகப் பணியமர்த்தப்படுகிறவர் செய்கிற வேலை திரைக்கதை எழுதுவதும்கூடத்தான். ஆனால் க்ரெடிட் வசனத்துக்கு மட்டுமே. இதை உணர்ந்தே எழுத்தாளர்களும் பயணிக்க வேண்டியிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் புதிய இயக்குநருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அவரிடம் கதை கேட்கச் சொன்னார். கேட்க ஆரம்பித்த மாத்திரத்தில் அது எந்தப் படத்திலிருந்து உட்டாலக்கடி செய்யப்பட்டது என்று புரிந்துவிட்டது. இருந்தாலும் பொறுமையாய் கேட்டுவிட்டு, “தம்பி கதை நல்லாருக்கு. ஏற்கெனவே ஹிட்டடிச்ச கொரியன் படம்தான். இதே படத்தை தமிழில் ஷூட்டிங் எடுத்து முடிச்சிட்டாங்க. அடுத்த மாசம் ரிலீஸ்” என்றேன். தற்போதுகூட ஒரே கொரியன் படத்தை இரண்டு அறிமுக இயக்குநர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்த இரண்டு படங்களிலும் நடித்த நடிகர் சொன்னார். இரண்டிலும் அதே கேரக்டராம். எது முந்திக்கொள்கிறதோ அதற்கு நல்லது.
**பாதுகாத்துக்கொள்வது நம் கடமை**
படம் பண்ணுவதற்காகக் கதையை உருவாக்கிக்கொண்டிருந்தவரிடம் நிதமும் காலையில் வீட்டிலிருந்து டிபன் கொண்டு போய் கொடுத்து, கதையைக் கேட்டுவிட்டு, அதைத் தன் கதையாய் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த உதவி இயக்குநர் ஒருவரை எனக்குத் தெரியும். ஒரு சமயம் ஒரிஜினல் இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது அதிர்ச்சியாகி இது நம்ம அசிஸ்டென்ட் டைரக்டர் கதையில்லே என்று கேட்டே விட்டேன். அவர் அது தன் கதைதான் என்று நிரூபிப்பதற்கு என்னிடமே படாத பாடு பட வேண்டியிருக்கிறது.
மொத்தமாக இருப்பது ஏழே ஏழு கதைகள்தான்; அவற்றைத்தான் ஒவ்வொருவரும் தன் திறமைக்கு ஏற்ப உருட்டிப் புரட்டி எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வார்கள். மொத்தமாகத் தொடர்ந்து ஏழு சீன்கள் ஒன்றாக இருந்தால் கதை உரிமை கேட்கலாம் எனப் புரளியாய் ஓடிக்கொண்டிருக்கும் விதி ஒன்று இருக்கிறது.
இன்றைய தேதிக்கு கதை உரிமை என்பது சங்கத்தில் பதிந்தாலும் கோர்ட்தான் இறுதி என்கிற நிலைமை இருக்க, நம் கதையை நாம் காப்பாற்றிக்கொள்ள அத்தனை வழிகளையும் பயன்படுத்தியே தீர வேண்டும். நான் என் கதைகளை மின்னஞ்சல் மூலமாகத்தான் அனுப்புகிறேன். தேதி, நேரம், யாருக்கு அனுப்புகிறோம் என்பது உறுதியாய்த் தெரிந்துவிடும். அவர்தான் கதையைத் திருடினார் என்றால் நிச்சயம் மாட்டிக்கொள்வார்கள்.
அதிலும் பணம் உள்ளவர்கள் தில்லாலங்கடி செய்தாவது கேஸில் வெற்றி பெறும் ஊர்தான் இது என்பதால் சட்டபடி எத்தனை வழிகள் உண்டோ, அத்தனை வழிகளிலும் என்னுடயது என்று பதிந்து வைத்துக்கொள்வதே வழி. ஏனென்றால் அத்தனை சண்டை போட்ட மீஞ்சூர் கோபி, இன்றைக்கு அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்கிறார். ஆகவே, அறம் குறித்துக் கேள்வி கேட்க யோசனையாய் இருக்கிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். மின்னம்பலம் பதிப்பகம் சார்பாக இவருடைய ‘கனவைத் துரத்துதல்’ நூல் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com)�,”