உலகளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கும் இந்தியாவின் மிகப் பிரபலமான `மஹிந்த்ரா` நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா பற்றி இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காண்போம்.
1955ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி மும்பையில் ஆனந்த் மஹிந்த்ரா பிறந்தார். இவர் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. படித்தார். ஆனந்தின் தந்தை J.C.மஹிந்த்ரா , K.C மஹிந்த்ரா மற்றும் மாலிக் குலாம் முகம்மது ஆகியோர் இணைந்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உருக்கு வர்த்தகத் தொழிலை 1945ஆம் ஆண்டு தொடங்கினார்கள். இந்த நிறுவனம்தான் தற்போது பெரிய அளவில் வளர்ந்து சர்வதேச அளவில் மிகப் பிரபலமான மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனமாக மாறியுள்ளது.
1947ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது, மாலிக் குலாம் முகம்மது மஹிந்த்ரா நிறுவனத்திலிருந்து பிரிந்து பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டார். பின்னர் ஆனந்தின் தந்தை நிறுவனத்தின் பெயரை மஹிந்த்ரா & மஹிந்த்ரா என மாற்றினார்.
ஆனந்த் படித்து முடித்த பின்பு 1981ஆம் ஆண்டு மஹிந்த்ரா யூஜின் ஸ்டீல் நிறுவனத்தில் நிதி இயக்குநரின் நிர்வாக உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டிலேயே ஆனந்த் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1991ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில்தான் மஹிந்த்ரா நிறுவனம் விவசாயத்திற்குப் பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்தது.
ஆனந்த் மஹிந்த்ராவின் தலைமையில் அன்று டிராக்டர் மற்றும் உருக்கு தயாரித்த மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனம் இன்று பல துறைகளில் சிறப்பாக விளங்குகிறது. இன்று அந்நிறுவனம் ஏரோ ஸ்பேஸ், வேளாண்துறை, வாகன உற்பத்தி, நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை தயாரிப்புகள், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், பண்ணை உபகரணங்கள், ஓய்வு மற்றும் விருந்தோம்பல், லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட், சில்லறை வர்த்தகம், இருசக்கர வாகனத் தயாரிப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது உலகின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனம் செயல்படுகிறது.
’மஹிந்த்ரா டிராக்டர்ஸ்’ உலக அளவில் மிகப்பிரபலாமானது. இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் மஹிந்த்ரா டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. ஸ்கூட்டி மற்றும் பைக்குகள் போன்ற இருசக்கர வாகனத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழிநுட்பத் துறையைப் பொறுத்தவரையில் ’டெக் மஹிந்த்ரா’ இந்திய அளவில் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
’மாம் & மி’ சில்லறை வர்த்தக தயாரிப்புகள் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுமார் 2 லட்சம் பேர் வரை ’கிளப் மஹிந்த்ரா’ விடுமுறைத் தொகுப்பை தேர்வு செய்கின்றனர். மேலும் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிதிச் சேவை நிறுவனம் பெரிய நிதி நிறுவனமாகத் திகழ்கிறது. இப்படி பல துறைகளில் மஹிந்த்ரா நிறுவனத்தை முன்னேற்றிய பெருமை ஆனந்த் மஹிந்த்ராவையே சேரும்.
2015ஆம் ஆண்டு கணக்குப்படி மஹிந்த்ரா நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் சேர்த்து சுமார் 2,00,000 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு (2016) கணக்குப்படி மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனத்தின் மொத்த வருவாய் மதிப்பு 17.8 பில்லியன் டாலர்களாகும்.
தொகுப்பு : பிரகாஷ்�,