கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி மாலையில் சிறுமி திடீரென காணாமல் போனார். பின்னர் சிறுமியின் பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல் துறையினரும், உறவினரும் குழந்தையைத் தேடி வந்தனர். இரவு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அடுத்த நாள் (மார்ச் 26) காலையில் சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை தலைமை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க காவல்துறை 10 தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கியது, பின்னர் 13 தனிப்படைகளாக அதிகரிக்கப்பட்டது .
குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் பலரையும் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் ஏழு பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமியை கொலை செய்வதற்கு முன்பு இரண்டு முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தோஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.�,