நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நேரம் கனியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான விஷயங்களில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூட்டணி குறித்து பேசியிருந்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருப்போம் என்று அறிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அண்மையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த திருமாவளவன், “கூட்டணியில் என்னென்ன கட்சிகள் உள்ளன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பொறுப்பு திமுகவிடம் உள்ளது. திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தற்போதுவரை தோழமைக் கட்சிகளே. கூட்டணிக் கட்சிகள் அல்ல” என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் இடம்பெறவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், சென்னையில் இன்று (நவம்பர் 16) செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான நேரம் இன்னும் கனியவில்லை. திமுக,காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கொள்கை அடிப்படையிலும் மீண்டும் சங் பரிவார் அமைப்புகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையிலும் ஒரு நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்துள்ளது. நேரம் வரும்போது கூட்டணி குறித்த பேச்சு நடக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இலங்கை அரசியலில் எப்போது இல்லாத நெருக்கடியை சிறிசேனாவும் ராஜபக்சேவும் இணைந்து உருவாக்கினார்கள். இருவரும் சேர்ந்து நடத்திய அரசியல் நாடகம் இன்று தோல்வியை சந்தித்துள்ளது. ஜனநாயகம் உரிய நேரத்தில் அவர்களுக்குப் பாடம் புகட்டியுள்ளது. இந்திய ஆட்சியாளர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு பாடம் ஆகும்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக தான்தோன்றித்தனமாக பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அறிவித்தார். இதனால், தற்போது இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. உலக அரங்கில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முழுப் பொறுப்பு மோடிதான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.�,