fகுழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

Published On:

| By Balaji

மூன்றரை வயதுக் குழந்தையைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது திருச்சி நீதிமன்றம்.

திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், துரைசாமிபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். இதனை சிவகுமாரின் மனைவி லட்சுமிபிரபா நிர்வகித்தார். அதே பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவரது மகள் ரோஸ்லின் பாக்கியராணி இக்கடையில் பணியாற்றி வந்தார். சிவகுமாரின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாகப் பழகினார். ஒருகட்டத்தில் அவரது நடவடிக்கைகள் சிவகுமார் குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டனர்.

2016ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதியன்று சிவகுமாரின் மகள் ஷிதானியும், மகன் த்ரிஷும் கடையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினர். அப்போது அந்த வழியே வந்த ரோஸ்லின், த்ரிஷை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார். சிவகுமாரின் வீட்டுக்குச் செல்லாமல், அந்த தெருவில் காலியாக இருந்த ஒரு வீட்டின் மாடிக்கு த்ரிஷை அழைத்துச் சென்றார். துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி, கன்னம் உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கடித்துக் காயம் ஏற்படுத்தினார். இதன் பின்னர் சிவகுமாரின் வீட்டுக்குச் சென்று த்ரிஷை தூங்கவைப்பதுபோலக் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து த்ரிஷ் காயங்களுடன் இருப்பதை அறிந்து பதறிய சிவகுமார் குடும்பத்தினர், குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர் மருத்துவர்கள். அதே நேரத்தில், 3 வயது குழந்தை த்ரிஷைக் கொன்றதாகக் கூறி பாலக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார் ரோஸ்லின்.

இது குறித்த வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (பிப்ரவரி 15) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமரகுரு, குற்றம்சாட்டப்பட்ட ரோஸ்லின் பாக்கியராணிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இரண்டு ஆயுள் தண்டனையையும் அவர் ஏக காலத்தில் விதிக்க வேண்டுமென்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share