காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினருடன் பிரதமரை சந்திக்க அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளதாக நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த நீரிலிருந்து 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து, அதனைக் கூடுதலாக கர்நாடகாவுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்னும் ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தமிழக விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும், இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு கோரிக்கை விடுத்த நிலையில், அதுவே தீர்மானமாக இயற்றப்பட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக இன்று (பிப்ரவரி 24) புதிதாகத் தொடங்கப்பட்ட ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது புரட்சித் தலைவி அம்மாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கர்நாடகமும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டு இருப்பதால் அதற்கு முன்னதாகவே தமிழகம் தரப்பில் சென்று வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்டது. இன்னும் 5 வாரம் தான் இருக்கிறது. இதில் மத்திய அரசு காலதாமதம் செய்ய எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது என்றும் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அடுத்த வாரம் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரப்படும் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இதர அலுவல்கள் அடிப்படையில் தமிழக குழு சந்திக்க தேதி, நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனைத்துக் கட்சியினருடனும் டெல்லி செல்வது தொடர்பாக சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வரும், துணை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.�,”