fகஜா: நிவாரணப் பணிகள் குறித்து அறிக்கை!

Published On:

| By Balaji

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து வரும் 29ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயலினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைத் தேசியப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

“கஜா புயல் தாக்குதலுக்குப் பிறகு தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மக்களுக்குச் சரியான உணவு, குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலியான விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தாததால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல கிராமங்கள் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. அரசு நிவாரண நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. மத்திய அரசும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு புது வீடுகள் கட்டித் தர வேண்டும்” என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசினால் எடுக்கப்படும் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், ஒரே இரவில் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இன்று (நவம்பர் 22) மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வரும் 29ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share