சமீப காலமாக ஐ.டி. பணிநீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்துறை சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கிமயத்தாலும், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வர்த்தகப் பணிகளை லாபகரமானதாக மாற்ற, ஐ.டி. நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சமீபத்தில் அமெரிக்காவில் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளால் அந்நாட்டில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆள் சேர்க்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டி.சி.எஸ்., ஐ.பி.எம்., விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவுசெய்து, அதற்கான பணியில் ஏற்கனவே இறங்கிவிட்டன. இந்நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், “தற்போதைய டிஜிட்டல்மய உலகத்தில் அனைத்து நுகர்வோர்களும், தொழில்களும் டிஜிட்டல் சேவைகளுக்குத் தங்களை மாற்றி வருகின்றன. தொழில்நுட்பம் அதிகரிக்கிறது என்றால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பை வழங்கும் இந்தத் தொழில்நுட்பம் என்பது, நிறம், ஜாதி, நம்பிக்கை போன்ற எதையும் சார்ந்ததல்ல. அது தகுதி, திறமை மற்றும் நுகர்வோர் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது. சமூக மற்றும் அரசியல் உள்ளீடுகள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமானது இவ்வுலகை வேகமான வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்கிறது.
எனவே இந்த டிஜிட்டல்மய உலகில் நிறுவனங்கள் தங்களுக்குள்ளான போட்டியை வலுப்படுத்தி, திறைமைமிக்கவர்களை பணியமர்த்தி முன்னேறிச் செல்ல வேண்டும். கடந்த 20 வருடங்களாக ஒரு நிறுவனத்தைச் சிறப்பாகச் செதுக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றி வருகிறது. தற்போதைய நிலையில், லாஜிஸ்டிக் முதல் அனைத்துச் சேவைகளிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காக உள்ளது. தற்போது தானியங்கிமயம் அதிகரித்து வருவதோடு, அனைத்துத் தகவல் தொழில்நுட்பச் சேவைகளும் தானியங்கிமயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் தொழில்நுட்பப் பயன்பாடுகளால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்படுமே தவிர அதற்குப் பாதிப்பு ஏற்படாது. உதாரணத்திற்கு, பெரும்பாலான விமானங்கள் தற்போது ஆட்டோமேஷன் சார்ந்த தொழில்நுட்பத்துடன் இயங்குகின்றன. அதில் விமான ஓட்டிகளின் பங்கு தரையிறங்குதல், பறக்கத் தொடங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே உள்ளது. எனவே ஆட்டோமேஷன் உள்ளீட்டால் விமான ஓட்டிகளுக்குப் பணி பறிபோகவில்லை. மாறாக விமானச் சேவை இன்னும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.
�,