எழுவர் விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சட்டப்படி என்ன முடிவு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று (மார்ச் 13) நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கிண்டியிலுள்ள லி மெரிடியன் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர் . ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் ஏன் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறார் என்று கூறிய பின் கேள்விகளை எதிர்கொண்டார்.
புல்வாமா மற்றும் பாலக்கோட் நிகழ்வுகளுக்குப் பிறகு உங்களுக்கான புதிய சவால்கள் அதிகரித்துள்ளதாக கருதுகிறீர்களா? பாஜகவுக்கு மிகுந்து தைரியம் உள்ளதாக நீங்கள் நினைகிறீர்களா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நீண்ட பதிலளித்த ராகுல், “45 துணை ராணுவப் படையினர் அநியாயமாக கொல்லப்பட்டனர். அரசாங்கம் இவர்களுக்கு என்ன பாதுகாப்பு அளித்தது? தாக்குதலை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக்கொள்கின்றனர். அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை விடுதலை செய்தது பாஜக அரசாங்கம்தான். இதற்கு பாஜக விளக்கம் அளிக்க வேண்டும்.
மற்றபடி இந்த தேர்தலில் 3 அல்லது 4 மிகமுக்கிய பிரச்சினைகள் எதிரொலிக்க உள்ளன. அவற்றில் மிகப்பெரிய பிரச்சினையாக மக்கள் கருதுவது வேலைவாய்ப்பின்மையைத்தான். ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து மோடி தோல்விப் படத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனை இளைஞர்களும் புரிந்துகொண்டுள்ளனர். அடுத்து விவசாயிகள் பிரச்சினை, தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியதைப் பார்த்தோம். அவர்களிடம் அரசு எவ்வாறு நடந்துகொண்டது என்பதையும் பார்த்தோம். விவசாயிகளை மோடி அரசாங்கம் மதிக்கக் கூட இல்லை.
மூன்றாவது பிரச்சினை, ஒட்டுமொத்த நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். சிபிஐ இயக்குனர் நள்ளிரவில் நீக்கப்படுகிறார். ரிசர்வ் வங்கி இயக்குனருக்கு தெரியாமல் பணமதிப்பழிப்பு கொண்டுவரப்படுகிறது, ரிசர்வ் வங்கி இயக்குனர் ராஜினாமா செய்கிறார், அதுமட்டுமல்லாமல் தமிழ் கலாச்சாரத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தாக்குதல் நடக்கிறது. தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் இதனைத்தான் உணர்கின்றன. இந்த நாட்டை நாக்பூரிலிருந்து ஆட்சி செய்ய நினைத்தால் அது முடியாது. வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக பிரதமர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இது தமிழக மக்களை அவமதிப்பதாகும். தமிழக அரசை டெல்லியிலிருந்து இயக்குகிறார்கள் என்பது இதுவரை இல்லாத ஒன்று” என்று தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள், உங்கள் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு, “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மோடி, ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்க்கிறோம். பிரதமர் யார் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்” என்று பதிலளித்தார்.
எழுவர் விடுதலை தொடர்பான கேள்விக்கு, “எனது தந்தை படுகொலை செய்யப்பட்டது தனிப்பட்ட முறையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் இழப்புதான். ஆனால் இது சட்டரீதியான பிரச்சினை. சட்டப்படி என்ன முடிவு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம். சிறையில் உள்ள 7 பேர் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் எனக்கு இல்லை. அவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.�,