தெலுங்கில் முன்னணி நாயகியாக இருந்துவந்த இலியானா, கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்ததன் வாயிலாக பாலிவுட்டிலும் முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்ற தெலுங்கு படம் மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் இலியானா. நாளை இப்படம் (நவம்பர் 16) வெளியாகிறது.
இதனிடையே ஐஏஎன்எஸ் ஊடகத்திற்கு இலியானா அளித்துள்ள பேட்டியில் திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். அதில், “மீ டூவில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். திரைப்படத்தில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது. மீ டூ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்குக் குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். மீ டூவால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன்” என்றார்.
தெலுங்கு படங்களின் இடைவேளைப் பற்றிக் கூறும் போது, “இந்தியில் அதிக படங்களுக்கு நேரம் ஒதுக்கியதால் தெலுங்கு படங்களுக்கு எனக்கு நேரம் குறைவாகவே கிடைத்தது. தெலுங்கு திரைப்படங்களில் நடனமாடுவதற்கும், ஒரு காட்சி பொருளாக இருப்பதற்கும் விரும்பவில்லை. சரியான கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் போது, ‘அமர் அக்பர் ஆண்டனி’ அமைந்திருக்கிறது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் தனது சொந்த வாழ்க்கை பற்றி பேசும் போது, “எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த விஷயங்கள் குறித்துப் பேச நான் விரும்பவில்லை.
நான் 20 வயதில் இருந்தபோது என் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தேன். பல வருடங்களாகத் திரைப்படங்களில் எல்லாவற்றையும் செய்தேன். இப்பொழுது 32 வயதாகிறது. என் சிந்தனை செயல்முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில விவேகமான தேர்வுகள் செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் பிரதிபலிக்கிறேன். நீண்ட காலமாக நினைவுபடுத்தும் படங்களின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.
�,”