மேம்படுத்தப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஏறவும், இறங்கவும் கட்டணம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நீண்டதூர ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் உயர்கிறது.
ரயில் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், மறுசீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளன. அந்த வகையில் மேற்கு மத்திய ரயில்வேயின் ராணி கமலாபதி ரயில் நிலையமும், மேற்கு ரயில்வேயின் காந்தி நகர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இவ்வாறு மேம்படுத்தப்படும் அல்லது மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்ததும், அந்த நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறவும், இறங்கவும் கட்டணம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
‘நிலைய மேம்பாட்டு கட்டணம்’ என்ற பெயரில் வசூலிக்கப்படும் இந்தக் கட்டணம், பயணிகளின் பயண வகுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏசி வகுப்பு பயணிகளுக்கு ரூ.50-ம், படுக்கை வசதி கொண்ட வகுப்பு பயணிகளுக்கு ரூ.25-ம், முன்பதிவில்லா பயணிகளுக்கு ரூ.10-ம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
இது ஏறும் நிலையம் அல்லது இறங்கும் நிலையம் என ஒரு முறைக்கு மட்டுமான கட்டணம் ஆகும். அதேநேரம் ஏறுவதும், இறங்குவதும் மேம்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையமாக இருந்தால், இந்தக் கட்டணம் ஒன்றரை மடங்காக இருக்கும் என்றும் ‘நிலைய மேம்பாட்டு கட்டணம்’ அனைத்து நிலையங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் அது ஒரு தனி பாகமாகவும் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி ஆகவும் விதிக்கப்படும் எனவும் ரயில்வே துறை கூறியுள்ளது.
இந்தக் கட்டணம், டிக்கெட் முன்பதிவின்போது சேர்த்து வசூலிக்கப்படும். இதன் மூலம் நீண்டதூரம் செல்லும் ரயில்களில் டிக்கெட் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் புறநகர் ரயில் பயணிகளிடம் இந்த ‘நிலைய மேம்பாட்டு கட்டணம்’ வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
இதைப்போல மேற்படி மேம்படுத்தப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமும் ரூ.10 அதிகரிக்கப்படுகிறது.
‘நிலைய மேம்பாட்டு கட்டணம்’ ரயில்வேக்கு தொடர் வருவாயை உறுதி செய்யும் எனவும், தனியார் துறையைக் கவரும் வகையில் இது அமையும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
**-ராஜ்**
.�,