கூட்டம் குறைவு: ரத்து செய்யப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவுவதால் ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் சில ரயில்கள் கூட்டம் இன்றி காலியாக ஓடுகின்றன. இதன் காரணமாக தெற்கு ரயில்வே 14 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது.

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து மே 1ஆம் தேதி முதலும், கன்னியாகுமரியில் இருந்து மே 2ஆம் தேதி முதலும் ரத்து செய்யப்படுகிறது.

கோவை, பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் இன்று (ஏப்ரல் 29) முதல் இரு வழியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்ட சதாப்தி ரயில் இன்று முதல் இரு வழியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்ட சதாப்தி ரயிலும் இன்று முதல் இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் சென்ட்ரல் – லோக்மன்யா இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலும் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவை உட்பட 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை போல பயணிகள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், பிறமாநிலங்களுக்கும் செல்லக்கூடிய பயணிகள் குறைந்ததால் அந்த சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் இ-பாஸ், கொரோனா பரிசோதனை போன்ற கட்டுப்பாடுகள் விமானப் பயணத்துக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பயணத்தைத் தவிர்த்து வருகிறார்கள்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share