வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கிடங்கில் தேங்கிக்கிடந்த காலாவதியான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அழிப்பதற்காகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலகூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. அதேநேரத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், தபால் ஓட்டுகளில் முறைகேடு ஏற்படுவதைத் தவிர்க்கவும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில் வேலூர் மாவட்டத்தில் காலாவதியாகித் தேங்கிக் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பதற்காகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.2014 மக்களவைத் தேர்தலின்போது முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் m1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட 9,000 இயந்திரங்கள் காலாவதி ஆகியுள்ளது.
எனவே காலாவதியான இயந்திரங்கள் அழிக்கப்படுவதற்காக, நேற்று வேலூரிலிருந்து சென்னையில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பணிகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 2,000 வாக்குப் பதிவு இயந்திரங்களும்,1,310 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், ஆட்சியர் அலுவலகக் கிடங்கிலிருந்து 6,113 இயந்திரங்கள் என ஏறத்தாழ 9,000 இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
**-பிரியா**
�,