மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று மாலையுடன் முடிவுற்ற நிலையில், எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு திங்கட்கிழமை (அக்டோபர் 21) முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எனப்படும் எக்சிட் போல் முடிவுகள் இரு மாநிலங்களிலும், ஆளும் பாஜகவுக்குப் பெரும்பான்மையைக் கணித்துள்ளன.
**‘எக்சிட் போல்’ என்றால் என்ன? அவை எவ்வாறு நடத்தப்படுகின்றன?**
‘எக்சிட் போல்’ என்பது, வாக்காளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்த பிறகு வெளியிடப்படும் கருத்துக்கணிப்பு ஆகும். எந்த அரசு ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது குறித்து இதில் கணிக்கப்படும். தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களிடம் ‘யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்படும் கருத்துக் கணிப்பு போல் இல்லாமல், இதில், ‘யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு முடிவுகள் வெளியிடப்படும். பல நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுக்கப்படும்.
மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது பேரணிகளில் உரையாற்றியபோது, ஒப்பீட்டளவில் சிறிய மாநிலமான ஹரியானாவில் (90 சீட்டுகள்) ஏழு பொதுக் கூட்டங்களில் உரையாற்ற நான்கு நாட்கள் ஒதுக்கியுள்ளார். பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மகாராஷ்டிராவில் 18 பேரணிகளில் உரையாற்றினார், ஹரியானாவில் ஏழு பேரணிகளில் உரையாற்றினார்.
காங்கிரஸைப் பொறுத்தவரை, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரு மாநிலங்களிலும் ஏழு பேரணிகளில் உரையாற்றினார். அதே நேரத்தில் இடைக்கால கட்சித் தலைவரான சோனியா காந்தி எந்த பேரணியிலும் உரையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**மகாராஷ்டிரா**
2014 மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக 122 இடங்களையும், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி முறையே 63, 42, மற்றும் 41 இடங்களையும் பெற்றுள்ளன.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா – சிவசேனா கட்சிகள் கூட்டணியும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் பலத்த போட்டியில் இருந்தன. மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான்கு தனித்தனி எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள் மதிப்பிட்டுள்ளன. அவற்றில் இரண்டு, ஆளும் கூட்டணிக்கு 200க்கும் மேற்பட்ட இடங்களை வழங்கின.
இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 166 – 194 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 72 – 90 தொகுதிகளிலும் மற்றவை 22 – 34 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என் நியூஸ் 18 – ஐபிஎஸ்ஓஎஸ் வெளியிட்டுள்ள எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 243 தொகுதிகளிலும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
டிவி 9 மராத்தி சிசேரோ வெளியிட்டுள்ள எக்சிட் போல் கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 197 தொகுதிகளிலும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 75 தொகுதிகளிலும், மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள எக்சிட் போல் கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளிலும், மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
நேட்டா ஆப் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக – சிவசேனா கூட்டணி 206 தொகுதிகளிலும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 65 தொகுதிகளிலும், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிம் கட்சி ஒரு தொகுதியிலும், மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
**ஹரியானா**
ஹரியானாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
ஹரியானாவில், 2014 தேர்தலில் 90 இடங்களில் 47 இடங்களை வென்றது பாஜக. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் 15 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
தற்போது நடைபெற்ற வாக்குப் பதிவுகளைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலத் தேர்தல் எக்சிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்தியா நியூஸ் – போல்ஸ்ட்ராட் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளின்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 75 முதல் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 முதல் 12 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் அகாலி ஒரு தொகுதியிலும், மற்றவை ஒன்று முதல் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், மற்றவைக 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
நேட்டா ஆப் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 68 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் அகாலி ஒரு தொகுதியிலும், ஷிரோமணி அகாலி தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் 288 இடங்களுக்கும், ஹரியானாவின் 90 இடங்களுக்கும் அக்டோபர் 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
�,