இடைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காகப் பணம் வழங்குவது பற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து திமுகவினர் தொகுதி முழுவதும் வாக்குக்கு தலா 1,000 ரூபாய் பணம் வழங்கியதை, அன்று மதியம் 1 மணிப் பதிப்பிலேயே, [திமுக: அதிகாலைப் பட்டுவாடா ஆயிரம்](https://minnambalam.com/k/2019/10/14/32) என்ற தலைப்பில் வெளியிட்டோம்.
திமுகவை அடுத்து அதிமுக கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வாக்குக்கு 2,000 ரூபாய் வீதம் பணம் கொடுத்துக்கொண்டிருந்ததை, [விக்கிரவாண்டி: அதிமுக இரண்டாயிரம் விநியோகம்](https://minnambalam.com/k/2019/10/16/120/vikravandi-admk-two-thousand-rupees-for-vote) என்ற தலைப்பில் வெளியிட்டோம்.
இப்படி திமுக, அதிமுக இரு கட்சிகளும் பரஸ்பரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட மாதிரியே ஒருவர் பணம் கொடுப்பதை இன்னொருவர் எதிர்க்காமல் பண விநியோகத்தை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.
ஓட்டுக்குப் பணம் வாங்குவது பற்றி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய விழுப்புரம் நகர் பகுதியை ஒட்டியிருக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை ஒன்றியம் சாணந்தோப்பு கிராமத்துக்குச் சென்றோம்.
அங்கிருக்கும் மக்களிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பில் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு சில பெண்களிடம் தேர்தல் தொடர்பாகப் பேசினோம். நம் கையில் வீடியோ கேமரா இருப்பதைப் பார்த்ததும் கிராமத்துப் பெண்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் உண்மைகளைச் சொல்ல அவர்கள் ஒரு போதும் தயக்கம் காட்டுவதில்லை என்பதை அவர்களின் பேட்டியே உணர்த்துகிறது.
சுந்தரி என்ற பெண்ணிடம், ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தாங்களாம்மா?’ என்று கேட்டோம்.
“எங்களுக்கு இரட்டை இலை காசு கொடுத்தாங்க. 2,000 ரூபா கொடுத்தாங்க. அவங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவோம். என்னான்னு தெரியலை, திமுக எங்களை பிரிச்சுப் பாக்குறாங்க. அவங்க குடுக்கவே இல்லை” என்றவரிடம் திமுக பணம் கொடுத்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டோம்.
“திமுக கொடுத்திருந்தால் பிரிவா போட்டிருப்போம். குடும்பத்துல பாதி ஓட்டு அவங்களுக்கும் பாதி ஓட்டு இவங்களுக்குமா போட்டிருப்போம்” என்று அதிரடியாக பதில் அளித்தார்.
அவர் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண்மணியிடம் பேசினோம். அவரிடம் பெயர் கேட்டதற்கு, “என் பேரா? தெரியாதே?” என்று நம்மையே கலாய்த்தவர், பின் இயல்பாகப் பேசத் தொடங்கினார்.
“என் பேரு மஞ்சுளா. ஊரு ஈச்சங்காடு. எங்களுக்கு இரட்டை இலைக்காரங்க 2,000 ரூபா கொடுத்தாங்க. எங்க வீட்ல மூணு ஓட்டு. 6,000 ரூபா கொடுத்தாங்க. போன தடவை ரெட்டை இலை ஓட்டுக்கு 200 ரூபாதான் கொடுத்தாங்க. இந்த வாட்டி ஓட்டுக்கு 2,000 காலையிலயே கொடுத்தாங்க” என்றார் சிரித்தபடியே.
அதே ஊரில் இளம்பெண் புவனேஸ்வரியிடம் பேசினோம்.
“எங்க வீட்ல நாலு ஓட்டு. ரெட்டை இலை காரங்க ஓட்டுக்கு 2,000 கொடுத்தாங்க. திமுகக்காரங்க கொடுக்கவே இல்லை. அவங்க பாத்துப் பாத்துக் கொடுக்குறாங்க. இவங்க போடுவாங்க. இவங்க போட மாட்டாங்கன்னு பாத்துப் பாத்து திமுகக்காரங்க கொடுக்குறாங்க, ஒருவேளை திமுகக்காரங்க கொடுத்தாங்கன்னா ரெண்டு ஓட்டு இதுல போடுவோம். ரெண்டு ஓட்டு அதுல போடுவோம். திமுகக்காரங்களும் கொடுத்திருந்தா ரெண்டு பேருக்கும் போட்டிருப்போம். ஆனா அவங்க கொடுக்காததால் காசு கொடுத்தவங்களுக்குத்தான் போடுவோம். நாங்க கேட்போம்னு நினைச்சு திமுகக்காரங்க, ‘காசு தீர்ந்து போச்சும்மா. வந்ததும் கொடுத்துடறோம்’னு சொன்னாங்க. நிறைய வீட்டுக்கு அவங்க கொடுக்கலை” என்கிறார் புவனேஸ்வரி.
இந்த நிலவரத்தை அறிந்துகொண்டு விக்கிரவாண்டி தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கே தேர்தல் துணை தாசில்தார்களில் ஒருவரான சிவாவிடம் பேசினோம்.
“விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்காக பறக்கும் படை மூன்று டீம் இருக்கு. ஒவ்வொரு டீம்லயும் மூன்று பேர்னு ஒன்பது பேர் இருக்காங்க. அதேபோல கண்காணிப்புக் குழு மூன்று டீம் இருக்காங்க. அதுக்கும் தலா மூன்று பேர் இருக்காங்க. காலையில பாத்தீங்கன்னா ஆறு வண்டிகள், மதியம் ஆறு வண்டிகள், நைட் ஷிப்ட் ஆறு வண்டிகள்னு மொத்தம் 18 ஸ்குவாடு வண்டிகள் தொகுதிக்குள் ஓடிக்கிட்டிருக்கு” என்றவரிடம், ‘இதுவரைக்கும் தொகுதியில் பணம் பிடிபட்டிருக்கிறதா?’ என்று கேட்டோம்
“இதுவரைக்கும் டோட்டலா ஒரு பதினேழரை லட்சம் ஒரு இடத்துல பிடிச்சாங்க. 20 லட்சம் வரை பிடிச்சிருக்காங்க. இதுமட்டுமில்லாம கிப்ட் ஐட்டங்கள், டிபன் பாக்ஸ் போல நிறைய பொருட்களை அதிக அளவுல பிடிச்சுருக்கோம்” என்றார்.
‘ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக உங்களுக்கு புகார் வந்திருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டபோது, “அதுமாதிரி இதுவரைக்கும் எந்த கம்பிளைண்டும் எங்களுக்கு வரலை. அப்படி எதுவும் எங்களுக்கு தெரியலை. புகார் வந்திருந்தா ஸ்குவாடு போய் பிடிச்சிருப்பாங்க” என்று பதில் கொடுத்தார் சிவா.
மக்களோ எவ்வாறெல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று வெளிப்படையாக சொல்ல, தேர்தல் ஆணையமோ தினமும் 18 ஸ்குவாடு வண்டிகள் தொகுதிக்குள் ஓடியும், இதுவரை பணம் கொடுத்தது பற்றி ’தெரியாமலேயே’ இருக்கிறது.
இதுதான் விக்கிரவாண்டியின் உண்மைக் கள நிலவரம்!
�,”