கொரோனா பரவல் காரணமாக, இன்று காலை பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், கோயில் வளாகத்திலேயே அமைக்கப்பட்ட செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிகழ்வை காண்பதற்கு பல லட்சம் மக்கள் கூடுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழா களை இழந்துவிட்டது.
கடந்தாண்டும் திருவிழாக்கள் அனைத்தும் கோயில் வளாகத்திற்குள்ளே நடத்தி முடிக்கப்பட்டது. அதுபோன்று இந்தாண்டும், பக்தர்கள் இன்றி ஆகம விதிப்படி அழகர் கோயில் வளாகத்திலேயே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இன்று(ஏப்ரல் 27) காலை தங்கக்குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர், ஆண்டாள் மாலை சாற்றுதலை ஏற்றுக்கொண்டு சம்பிரதாயப்படி ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக அழகர் கோயிலின் தெற்கு பகுதியில் தரையில் பாலித்தீன் விரிப்புகள் விரித்து அதில் தண்ணீரை நிரப்பி, வைகை ஆறு மற்றும் ஏ.வி, மேம்பாலம் போன்று செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டு உடுத்திக் கொண்டு கள்ளழகர் செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு யூடியூப் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
கோயில் வளாகத்தின் வெளியே அமைந்துள்ள கள்ளழகர் சிலையின் முன்பு அதிகமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கியதால் இந்தாண்டு விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.
**அபிமன்யு**
.
�,”