ஈரோடு மாவட்டம், பவானி நகரில் உள்ள அந்தியூர் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை ஓரங்களிலிருந்த மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அந்தக் கடை மூடப்பட்டது.
பிறகு, மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் மாவட்ட நெடுஞ்சாலைகளாகவும், கிராமச் சாலைகளாகவும் மாற்றி மூடப்பட்ட மதுக்கடைகளை எல்லாம் தமிழக அரசு மீண்டும் திறந்து வருகிறது.
இந்த நிலையில், பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் சாலையில் மூடப்பட்ட மதுக்கடை நேற்று (ஜனவரி 29) திறக்கப்பட்டது. பண்டார அப்பிச்சி கோயில் அருகில் தனியார் கட்டடத்தில் அமைந்துள்ள இந்தக் கடையின் திறப்பு விழாவில், கலந்து கொண்ட டாஸ்மாக் அதிகாரிகள் வெங்கடாசலபதி, விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் என ஐந்து சாமிகள் படத்தைப் பூஜைக்காக வைத்துள்ளனர். சாமி படத்துக்கு முன்பாக விற்பனைக்கு வந்த விஸ்கி, பிராந்தி பாட்டில்களை வைத்துப் படைத்து பூஜை செய்த பின்னர் விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.
புதிதாக மதுக்கடை திறக்கப்பட்ட இடத்தில், அரசு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியும் உள்ளது. தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் நலனைவிடவும் மது விற்பனையின் நோக்கமே முக்கியமாக உள்ளது.�,