மேட்டூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து தனது தாயுடன் நேற்று (மார்ச் 14) வீட்டுக்குச் சென்றார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் இளமதி. இவரும் தர்மபுரியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் செல்வனும் காதலித்துச் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை ஜெகநாதன் 40க்கும் மேற்பட்டவர்களோடு வந்து காவலாண்டியூரில் தங்கியிருந்த காதலர்கள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த திராவிடர் விடுதலை கழக ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரை தாக்கி இளமதியைக் கடத்தி சென்றனர்.
முதல்வர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில் கடந்த ஐந்து நாட்களாகக் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். இதனிடையே இளமதி கணவர் செல்வன் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 10 பிரிவின் கீழ் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பெண்ணின் தந்தை ஜெகநாதன் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த நிலையில் இளமதி நேற்று மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை கடத்தி சென்ற கும்பலாலேயே ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடன் அவரது தாய் மற்றும் சில உறவினர்கள் உடன் வந்துள்ளனர்.
காவல் நிலையத்தில், தன்னுடைய விருப்பத்தின் பேரில்தான் திருமணம் நடந்ததாகத் தெரிவித்துள்ள இளமதி, தற்போது யாருடனும் பேச விருப்பமில்லை. தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து காவல் நிலையத்தில் நடந்த ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு இளமதி அவர் தாயுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே செல்வன், திவிக நிர்வாகி ஈஸ்வரன் தொடர்ந்த வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நாளை (மார்ச் 16) விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் இளமதியும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
**-கவிபிரியா**�,