சத்தீஸ்கரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 4ஆம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையெனில் ஊரடங்கைக் கடுமையாக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 28 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நிலைமை இன்னும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதால் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே மாவட்ட வாரியான சூழ்நிலை தொடர்பான கருத்துகளைக் கேட்ட பிறகு, அதனடிப்படையில் ஊரடங்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில உள்துறை தெரிவித்துள்ளது.
மே 31ஆம் தேதி வரை உணவகங்கள், பார்கள், கிளப்புகள் மூடப்படும். விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர் கலெக்டர் எஸ்.பாரதி தாசன், ஆகஸ்ட் 16 வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் 59 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,