�சிறப்புச் செய்தி: பாதை மாறுமா? எரிவாயுக் குழாய்க்கு விவசாயிகள் தொடர் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிவாயு சாலைப் போக்குவரத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சாலை விபத்து ஏற்பட்டால் பெரும் சேதம் உண்டாகிறது. சாலை வழியாக லாரிகளில் எரிவாயு கொண்டு செல்வதில் நேர விரயமும், அதிக பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தனியார் தொழிற்சாலைகளின் வருமானத்தில் லாபம் குறைந்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக நிலத்தடியில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சாலை ஓரத்திலும், ரயில்வே தண்டவாளங்களின் அருகிலும் சில மாநிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுகிறது. நிலத்தடியில் பதிக்கப்பட்ட எரிவாயுக் குழாய்கள் வெடித்தும் சில இடங்களில் விபத்துகள் தொடர்ந்தன.

தமிழ்நாட்டில் விளைநிலங்களின் வழியாகவே எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதாக, மேற்கு மாவட்டங்களில் கெயில் திட்டத்துக்கும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

**நிலத்தடியில் எரிவாயு குழாய்**

இந்த நிலையில், தனியார் தொழிற்சாலைகளின் செலவைக் குறைத்திட, தமிழ்நாடு முழுவதும் நிலத்தடியில் எரிவாயுக் குழாய் பதித்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டில் அறிவித்தது.

அதன்படி எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 கி.மீ. தூரத்துக்கு எரிவாயுக் குழாய்கள் அமைத்திட ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஆர்டிபிஎல் (Ramanathapuram – Tuticorin Natural Gas pipeline – RTPL) என்றழைக்கப்பட்ட திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் 16.02.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் மக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தொழிற்சாலைகளின் செலவைக் குறைக்க விளைநிலத்தைத் தரமுடியாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க, கூட்டம் பாதியில் முடிந்தது.

உப்பாறு, வைப்பாறு, வேம்பாறு, மலட்டாறு, உத்திரகோசமங்கையாறு உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், அலையாத்திக்காடுகள், பவளப்பாறைகள் நிறைந்த மன்னார் வளைகுடா தேசிய உயிர்க்கோளக் காப்பகப் பகுதியின் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டதால், தொடக்கம் முதலே உள்ளூர் மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

வயல்வெளிகள் நிறைந்த சிறு, குறு விவசாயிகளின் நிலங்களின் வழியாக எரிவாயுக் குழாய் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குலையன்கரிசல் பகுதி விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் எரிவாயுத் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடந்த வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து நடைமுறைகளையும் நிறைவேற்றாமல் திட்டத்தைத் தொடங்கக்கூடாது என்று 15.05.2019 அன்று இடைக்காலத் தடை போட்டது. பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது. அதனால், 05.10.2018 மற்றும் 18.02.2019 ஆகிய நாட்களில் வந்த மத்திய அரசின் அறிவிப்பினைப் பின்பற்றி, ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையிலான எரிவாயுக்குழாய் பதிக்கும் பணிகள் வேகமெடுத்தது.

**விவசாயி தற்கொலை**

இதனிடையே, விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற விவசாயி 23.12.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார். தனது இரண்டு ஏக்கர் மானாவாரி விளைநிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்டதால் மனமுடைந்து, சூரங்குடி விவசாயி முனியசாமி தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி விவசாயிகள் எரிவாயு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டினர்.

வறண்ட நிலங்களை உடைய ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கால்வாசிப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றுப்பாசனம் நடக்கின்ற விளைநிலங்களில் எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வந்தது. தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு உட்பட்ட பகுதியில் நெல், வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. குலையன்கரிசல், பொட்டல்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலத்தில், 125 ஏக்கர் விளைநிலங்கள் வழியாக எரிவாயுக்குழாய் பதிக்கப்படுகிறது. இதில் 75 ஏக்கரில் நெல்லும் 50 ஏக்கரில் வாழையும் சாகுபடி செய்து வருகின்றனர். ஏற்கனவே விவசாயத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக 42 விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் நிலத்துக்கான இழப்பீட்டினை ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள இடங்களில் விவசாயிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொட்டல்காடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், குடியிருப்பு பகுதி, கல்லூரி வளாகம் அருகிலும் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டதால், அப்பகுதியில் கூடுதல் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வந்தனர்.

**எரிவாயு குழாய் அமைக்க போலீஸ் பாதுகாப்பு**

ராமநாதபுரத்திலிருந்து துாத்துக்குடி வரை 142 கி.மீ தூரம் இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலம் கொண்டு செல்லும் பணிகளில் 134 கி.மீ தூரம் முடிந்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு பகுதியில் மட்டும் எதிர்ப்பு உள்ளதால், எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்குக் காவல் துறை பாதுகாப்பு அளித்திட வேண்டுமென பட்டணம்காத்தான் ஐ.ஓ.சி. கட்டுமானப்பிரிவின் துணைப் பொது மேலாளர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2020 ஜூலை மாதம் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை விளக்கம் அளித்திட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அவ்வழக்கைக் காரணம் காட்டி ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிகளுக்கும், எரிவாயுக் குழாய் அமைக்கும் பணிகளுக்கும் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

காவல் துறை பாதுகாப்புடன் வந்தாலும், விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் அமைத்திட விவசாயிகள் அனுமதிக்கவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகளை சிறைப்பிடிக்கும் போராட்டத்தையும், கறுப்புக்கொடி, உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தினர். குலையன்கரிசல், பொட்டல்காடு கிராம மக்களுக்கு முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், காலாங்கரை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம், உமரிக்காடு, சிவகளை பகுதி விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத அளவுக்குப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நேரடி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது.

இயற்கை எரிவாயு மற்றும் மறு சுழற்சி திரவ இயற்கை எரிவாயு, ராமநாதபுரம் பகுதியிலுள்ள ஓஎன்ஜிசி எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலமாக, தூத்துக்குடி பகுதியில் ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா கெமிக்கல் போன்ற தனியார் பெருநிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும்.

நன்செய் வயல்கள், நீரோடைகள், கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்லாமல், அரசுக்குச் சொந்தமான மாற்றுப்பாதையில், முன்பே திட்டமிட்ட மதிகெட்டான் ஓடை வழியாகக் கொண்டு செல்லுமாறு குலையன்கரில், பொட்டல்காடு கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

**பணமும் இயற்கை வளமும்**

ஆனால், காட்டுப்பாதையில் கொண்டு சென்றால் பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் இருக்கும், மேலும், 97 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதால், இனி பாதையை மாற்றும்போது தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்படும் என்று எரிவாயு குழாய் பதிக்கும் நிறுவனத்தின் சார்பில் விளக்கம் கூறுகின்றனர். இன்னொருபுறம் போராடுகின்ற விவசாயிகளுக்கு மூன்று மடங்கு அதிக பணத்தை இழப்பீடாக வழங்குவதன் மூலமும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், வழிபாட்டுத்தலங்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலமும் பிரச்சினையை முடித்து வைக்க உள்ளூர் அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனம் குலையன்கரிசல் கிராமத்தில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (CSR Fund) எட்டு லட்ச ரூபாய் செலவில் திட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

நிலத்தடியில் பயணிக்கும் எரிவாயுக் குழாய் மூலமாக தனியார் தொழிற்சாலைகளின் வருமானம் அதிகரிக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்று பேச்சுவார்த்தை நடத்துகிறது அரசு தரப்பு. நீர் நிலைகள், நீர்பிடிப்பு பகுதிகள், நிலத்தடி நீர், விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மீன்பிடித்தல், மன்னார் வளைகுடா தேசிய உயிர்க்கோளக் காப்பகம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் பாதுகாப்பைக் கோரிக்கையாக முன்வைத்து, தங்களின் தற்சார்பு வாழ்வாதாரத்தை மட்டுமே நம்பிக் காத்திருக்கின்றனர் வேளாண் குடிமக்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share