�உடலுறவும் கோயில் சிலைகளும்: திருமா மீது வழக்குப் பதிவு செய்தவரின் பேட்டி!

Published On:

| By Balaji

இந்து கோயில்கள் குறித்து பேசியதற்காக விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 15ஆம் தேதி புதுச்சேரியில் சனாதன கல்வியை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய திருமாவளவன், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருமாவளவனுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த திருமாவளவன், “நான் பேசியவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு. எனினும், அதற்காக நான் வருந்துகிறேன். பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனாலும் அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் கருத்து தெரிவித்து வந்தன. நடிகை காயத்ரி ரகுராம், திருமாவளவனை கண்டால் அடிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசிக சமூக ஊடக மையம் அளித்த புகாரின் பேரில் காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்து கோயில்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில், இந்து முன்னணியின் நகர செயலாளர் கண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் திருமாவளவன் மீது பெரம்பலூர் காவல் துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பி 153 பி, 295 ஏ, 298, 504 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புகார் அளித்த கண்ணனை தொடர்புகொண்டு பேசினோம், “முதலில் எங்களுடைய அமைப்பு யாருக்கும் எதிரானது கிடையாது. இந்து கோயில்கள் குறித்து அநாவசியமாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு மூலமான உடலுறவு என்ற விஷயத்தை பொதுவெளியில் பேச முடியாது. அதனால்தான் அதுபோன்ற சிலைகளை வடித்து கோயில்களில் பாரம்பரியமாக வைத்துள்ளனர். இதனை அசிங்கமான பொம்மை என்று திருமாவளவன் சொல்வதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். அப்படியென்றால் கோயில்களை கட்டியவர்கள், சிலைகளை வடித்தவர்கள் எல்லாம் முட்டாள்களா?

மற்ற மதத்தினர் என்றால் எதுவும் பேசக்கூடாது. இந்து மதம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அப்படித்தானே. தனிநபர்களிடமோ அல்லது ஒரு அறையிலோ நீங்கள் பேசவது சரி. அதனை பொதுவெளியில் பேசலாமா? அப்படியென்றால் இந்துக்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டுதானே பேசுகிறார்கள். இதனால் எங்களுடைய வருத்தத்தை பதிவு செய்யும் வகையில் திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share