பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று (ஆகஸ்ட் 26) மாலை வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தில் 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்விற்கு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் 1,60,834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 1,31,436 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய நிலையில், 29 ,398 பேர் விருப்பம் தெரிவிக்காமல் கட்டணம் செலுத்தவில்லை.
மாணவர்கள் சான்றிதழ்களை கலந்தாய்வுக்காக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களில் 1,14,206 மாணவர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். கட்டணம் செலுத்தியவர்களில் 17,230 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதது தெரியவந்தது.
இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான ரேண்டம் எண்களை இன்று (ஆகஸ்ட் 26) மாலை உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிடவுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் ரேண்டம் எண்ணை வெளியிடவுள்ளார்.
பொறியியல் கலந்தாய்வில், ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி ரேண்டம் எண் அதிகமாக உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
தமிழகத்தில், இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம், 500க்கும் மேற்பட்ட பொறியியில் கல்லூரிகளில் உள்ள 2.64 லட்சம் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆனால் இந்த இடங்களைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,