�இந்தியாவில் ஐந்தாண்டுகளில் நடந்த என்கவுன்ட்டர்கள்: தமிழ்நாட்டில் எத்தனை?

Published On:

| By admin

கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் நடந்த என்கவுன்ட்டர்கள் விவரத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் நடந்தவை எத்தனை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
மக்களவையில் 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காவல் துறை செய்த என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கை குறித்தும், என்கவுன்ட்டர்கள் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் சந்தித்த வழக்குகள் குறித்தும் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சக இணையமைச்சர் நித்யானந்த ராய், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 2017 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை 655 என்கவுன்ட்டர்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 191, உத்தரப்பிரதேசத்தில் 117 என்கவுன்ட்டர்கள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாமில் 50, ஜார்கண்டில் 49, ஒடிசாவில் 36, ஜம்மு காஷ்மீரில் 35, மராட்டியத்தில் 26, பிகாரில் 22, அரியானாவில் 15 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 14 என்கவுன்ட்டர்கள் நடந்திருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தெலங்கானா, மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசத்தில் 13 என்கவுன்ட்டர்களும், ஆந்திரா, மேகாலயாவில் 9 என்கவுன்ட்டர்களும், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் 8 என்கவுன்ட்டர்களும் நடந்திருப்பதாகவும் மற்றும் சில இடங்களில் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share