உக்ரைன் ராணுவத்திற்கு இணையதள சேவை – எலான் மஸ்க்

Published On:

| By admin

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகின்றன. குறிப்பாக உக்ரைன் நாட்டிற்கு ரஷ்யாவை எதிர்த்து ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தாலும், ரஷ்யா இந்த போரில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.

இந்நிலையில் உக்ரைன் நாட்டு ராணுவத்தின் பயன்பாட்டிற்காக 15,000 இணையதள கருவிகளை அனுப்பியுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள்களின் வழியாக உக்ரைன் ராணுவத்திற்கு இணையதள சேவையை எலான் மஸ்க் வழங்கி வருகிறார். ஏற்கனவே எலான் மஸ்க் சார்பாக கடந்த ஏப்ரல் மாதம் 10,000 இணையதள கருவிகள் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 15 ஆயிரம் இணையதள கருவிகளை தற்பொழுது எலான் மஸ்க் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து உலகில் மிக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கூறுகையில், “உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலமாக அவர்களுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 10 ஆயிரம் இணையதள கருவிகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது மேலும் 15 ஆயிரம் இணையதள கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் டெஸ்லா நிறுவனத்தின் மூலம் சூரிய ஆற்றலால் மின்சாரம் பெறும் கருவிகளையும் உக்ரைன் ராணுவ பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share