தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களாலும், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளாலும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்த நிலையில் நீதிமன்ற உத்தவுகளை அடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மாநிலத் தேர்தல் ஆணையம்,
இதன் முக்கியமான கட்டமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டு வண்ணங்கள் மற்றும் ஓட்டுப் பதிவு நேரம் ஆகியவை குறித்து தமிழக அரசின் அரசிதழில் நேற்று (நவம்பர் 7) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
நவம்பர் 6ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே அரசிதழில் இந்த அறிவுப்புகள் வெளியாகியிருக்கின்றன. எனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.
தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எஸ்.பழனிசாமியின் உத்தரவில்,
“ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நடக்கும் வாக்குப் பதிவு தேர்தல் நாளன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 10 மணி நேரம் நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டின் வண்ணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குப் பதிவின்போது வெள்ளை அல்லது நீல நிற வாக்குச் சீட்டும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவில் பிங்க் வண்ண வாக்குச் சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குப் பதிவில் பச்சை நிற வாக்குச் சீட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் மஞ்சள் நிற வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்பபடும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்பது வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு என்ற வகையில் அச்சிடப்படும். கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அதற்கேற்றபடி கூடுதல் எண்ணிக்கையில் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.�,