மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து வனத்துறையினர் அழைத்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் மூன்று பேர் தீ வைத்ததால் படுகாயங்களுடன் அவதிப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து சிகிச்சை அளிக்க முதுமலைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த யானை உயிரிழந்தது.
இந்த நிலையில் மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக 40 வயதான ஆண் காட்டு யானை ஊருக்குள் தொடர்ந்து முகாமிட்டு வந்தது. நாளடைவில் அந்த காட்டு யானை பொதுமக்களுடன் பழகும் அளவுக்கு மாறியது. இருப்பினும் பொதுமக்கள் காட்டு யானையை கண்டு அச்சம் அடைந்தனர். வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வனத்துறை, சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து இறந்த யானையைப் போல் இந்த யானைக்கும் ஆபத்து வரலாம் என்று கருதி அதை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் மயக்க ஊசி செலுத்தினால் யானைக்கு பாதிப்பு வரலாம் என கருதினர். இதனால் பழங்கள், கரும்புகள் கொடுத்து காட்டு யானையை வனப்பகுதி வழியாக முதுமலைக்கு அழைத்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் காட்டு யானையைத் தேடினார்கள். அப்போது அந்த காட்டு யானை வாழைத்தோட்டம் பகுதியில் நின்றதை கண்டனர். இதையடுத்து வன ஊழியர்கள் வாழை, அன்னாசி, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் மற்றும் கரும்புகளை காட்டு யானை முன்பு சிறிது சிறிதாக வீசினர். இதைக்கண்ட காட்டு யானை அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட தொடங்கியது.
பின்னர் வனத்துறையினர் சிறிது தூரம் இடைவெளிவிட்டு பழங்களை கீழே வைத்தபடி சென்றனர். அந்த யானையும் அவற்றை எடுத்து சாப்பிட்டபடி வனத்துறையினரின் பின்னால் சென்றது. இவ்வாறு அந்த யானை வாழைத்தோட்டம் தொடங்கி மாவநல்லா வழியாக மசினகுடி பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டது. பின்னர் நேற்று (பிப்ரவரி 2) மாலை 6 மணிக்கு பொக்காபுரம் பகுதிக்கு காட்டு யானை வந்து சேர்ந்தது.
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அங்கேயே அந்த யானையை நிறுத்தி, அதற்கு பசுந்தீவனங்கள், பழங்கள், கரும்புகளைக் கொடுத்தனர். மேலும் அந்த யானை அங்கிருந்து சென்றுவிடாமல் இருக்க இரண்டு கும்கி யானைகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர், “வாழைத்தோட்டம் தொடங்கி பொக்காபுரம் வரை 5 கி.மீ தூரம் காட்டு யானை அழைத்து வரப்பட்டுள்ளது. இன்னும் 7 கி.மீ தூரம் அழைத்துச் சென்றால் முதுமலைக்குச் சென்றுவிடலாம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த யானை பொதுமக்களிடம் நன்றாகப் பழகிவிட்டதால், பழங்களைப் போட்டதும் அதை சாப்பிட்டு பின்னால் வந்து ஒத்துழைப்பு கொடுத்தது. எனவே கண்டிப்பாக முதுமலைக்கு அழைத்து சென்றுவிடுவோம். மேலும் இந்த யானைக்கு அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் ரிவால்டோ என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.
**-ராஜ்**�,